ஜெனிவா: இந்தியா உட்பட 25 நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கை மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. தொடக்கத்தில் இந்த தீர்மானத்தில் சர்வதேச விசாரணை கூறப்பட்டிருந்தது. ஆனால் பல சுற்று வாதங்களுக்குப் பின்னர் மிகவும் மென்மையான போக்குடன் கூடிய தீர்மானத்தை அமெரிக்கா இன்று தாக்கல் செய்தது.
இந்தத் தீர்மானத்தின் மீது முதலில் பேசிய பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவின் தீர்மானத்தில் சில அம்சங்களை நீக்கவும் வலியுறுத்தியது. அத்துடன் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்போம் என்று தெளிவான நிலைப்பாட்டையும் அறிவித்தது.
பின்னர் பேசிய இந்திய பிரதிநிதி, இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்க 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உலக நாடுகள் ஏற்கக் கூடிய நம்பகமான விசாரணை தேவை என்று கூறியிருந்தார்.
இத்தீர்மானத்தை ஏற்க முடியாது என்று இலங்கையின் பிரதிநிதியான அமைச்சர் சமரசிக்கே அறிவித்திருந்தார். தமது நாட்டின் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவதை விரும்புவதில்லை என்றார்.
பின்னர் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 25 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன. 13 நாடுகள் எதிராக வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள்சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக 2-வது முறையாக தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.