ஜப்பானின் உஸா பகுதியில் மூன்று வருடங்களாக தங்களின் வீட்டுக்குள் தாயின் எலும்புக் கூட்டை வைத்து இருந்ததற்காக ஐம்பது வயதைக் கடந்த இரண்டு மகள்கள் மற்றும் அறுபது வயதை கடந்த மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் அந்த வீட்டில் வசித்த மூதாட்டியின் நலனைப் பற்றி விசாரிக்க அங்கு சென்றபோது, அண்ணன் தங்கைகளான மூவரும் அதிகாரிகளை உள்ளே விட மறுத்துவிட்டனர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், உள்ளே சென்று ஆய்வு செய்தனர். அப்போது, மூதாட்டியின் எலும்பு கூடு இருப்பதைக் கண்டனர்.
இதுபற்றி அதிகாரிகள் விசாரித்தபோது, "எங்கள் அம்மா இறந்து போகவில்லை. அவள் உயர்ந்த பரிமாணங்களை அடையும் செயலாக்கத்தில் உள்ளார். அவள் கடவுளாக எங்களுடன் இருக்கிறார்" என்று கைதான அந்த உடன்பிறப்புகள் கூறியுள்ளனர்.
மூன்று வருடங்களாக உறவினர்களைக் கூட வீட்டில் அனுமதிக்காமல் இந்த மூவரும் வாழ்ந்து வந்து உள்ளனர். மரியாதைக்குரிய சமூகத்தைச் சார்ந்த இவர்களின் நடவடிக்கைகள் சில வருடங்களுக்கு முன்பு தான் மாறியது என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். மூதாட்டியின் பென்ஷன் பணத்தை ஏமாற்றிப் பெறுவதற்காக கூட இதனை மூவரும் செய்திருக்கலாம் என்று சந்தேகப்படபடுகிறது.
தற்பொழுது அந்த எலும்புக் கூட்டின் மூலம் அதன் அடையாளம், மற்றும் அவரது சாவுக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் சோதனைகள் நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை மூலம் அந்த எலும்புக் கூடு ஒரு பெண்ணின் எலும்புக்கூடு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஆனால் டி.என்.ஏ. சோதனைகளுக்கு பின்பே அதன் அடையாளம் தெரியவரும்.
