சென்னை: பெண், சிசு கரு கொலைகள் சட்டப்படி குற்றம் என்று அறிவித்தாலும் இன்னமும் பல மாவட்டங்களில் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பெண் சிசு, கருக்கொலைகள் தொடர்பாக சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி சார்பில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் இது தெரியவந்துள்ளது.
பெண் சிசுக்கொலை, பெண் சிசு கருக்கொலை உங்கள் பகுதியில் நடந்துள்ளதா? உங்கள் பகுதி மருத்துவமனைகளில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்க்கின்றனரா, தெரிவிக்கின்றனரா, உங்கள் ஊர் ஸ்கேன் மையத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று சொல்கிறார்களா? பெண் சிசுக்கொலை குறித்து யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்பது தெரியுமா உள்பட 11 வகை கேள்விகள் இந்த சர்வேயின்போது பொதுமக்களிடம் கேட்கப்பட்டன.
பெண் குழந்தையை காப்போம் பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் நாளுக்கு நாள் தற்போது குறைந்து வருகிறது. எனவேபெண் குழந்தையை காப்போம் என்ற தலைப்பில் சென்னைக் கல்லூரி மாணவிகள் இந்த சர்வே நடத்தினர்.
22 மாவட்டங்கள் 16 நாட்கள் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் 16 நாட்கள் நடத்தப்பட்டது. மொத்தம் 7,641 குடும்பத்தினரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் திண்டுக்கல் மாவட்ட மக்களில் 89 சதவீதம் பேருக்கு பெண் உரிமை, பெண்கல்வி, பெண்களுக்கான சொத்துரிமை குறித்த விவரங்கள் தெரிகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் சிசுக்கொலை 5 சதவீதமாக உள்ளது.
கிருஷ்ணகிரியில் அதிகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் கருக் கொலைகள் 30.26 சதவீதமாக உள்ளது என்று சர்வே மூலம் தெரியவந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் சராசரியாக 18 சதவீதம் வரை பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றன.
ஸ்கேன் மூலம் தெரிவிக்கின்றனர் சிசுக்கொலை நடந்தால் யாரிடம் புகார் தெரிவிப்பது என்பதில் பெரும்பாலான மக்களுக்கு பதில் தெரியவில்லை. உங்கள் ஊர் மருத்துவர்கள், கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிவிக்கிறார்களா என்ற கேள்விக்கு, கடலூரில் 47 சதவீதம் பேர், ஆம் என்று தெரிவித்தனர்.
பெண்ணின் திருமண வயது பெண்களின் திருமண வயது 18 என்ற கேள்வி குறித்து தமிழகத்தில் 70 முதல் 79 சதவீதம் பேருக்கு தெரிந்துள்ளது.
விழிப்புணர்வு வருமா? ஆணும் பெண்ணும் சமம் என்று எத்தனை முறை உரக்க கூறினாலும்,வரதட்சனை கொடுமைக்கு பயந்தே பலரும் பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கின்றனர். இதனால் வருங்காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள சரியான பெண் கிடைக்காமல் திண்டாட வேண்டியிருக்கும் என்று கூறுகின்றனர் ஆய்வு மேற்கொண்ட கல்லூரி மாணவர்கள்.