மாதவரம், மார்ச் 27-
மாதவரம் பால் பண்ணை அருகே 100 அடி சாலையில் கொசப்பூர் சந்திப்பு அருகே முட்புதருக்குள் நேற்று முன்தினம் இரவு சூட்கேஸ் ஒன்று அனாதையாக கிடந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியது.
போலீஸ் உதவி கமிஷனர் சங்கரலிங்கம், மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசியப்பன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சூட்கேசை உடைத்து பார்த்த போது அதில் ஒரு பெண்ணின் உடல் இருந்தது. அந்த பெண்ணின் முகம் மிகவும் சிதைந்து இருந்தது.
அவரை மர்ம ஆசாமிகள் கொலை செய்து பிணத்தை சூட்கேசில் மடக்கி வைத்து புதரில் வீசிச் சென்றது தெரிய வந்தது. பிணமாக கிடந்த பெண் நீலநிற சுடிதார் மேலாடையும், லுங்கி போன்ற உடையும் அணிந்திருந்தார். அவர் யார் என்று சுற்றுப்புற பகுதிகளில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
மேலும் காணாமல் போன பெண்கள் பற்றிய புகார் ஏதும் போலீஸ் நிலையங்களில் உள்ளதா? என்றும் விசாரித்தனர். இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை போலீசில் அபிதா பீவி என்ற பெண் காணாமல் போனதாக கடந்த 23-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
அவரது உறவினர்களை அழைத்து சென்று பிணத்தை காட்டினார்கள். அப்போது கொலை செய்யப்பட்டது அபிதாபீவி (வயது 65) என்று தெரியவந்தது. இவர் பழைய வண்ணாரப்பேட்டை, பகதூர் திவான் தெருவைச் சேர்ந்த முகமது மொய்தீன் என்பவரது மனைவி ஆவார்.
அபிதாபீவி கடந்த 17-ந் தேதி வீட்டில் இருந்து காணாமல் போனார். இதுபற்றி அவரது மகன் முபாரக் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிதாபீவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். அபிதாபீவி காணாமல் போன அன்று 4 பவுன் நகை அணிந்திருந்தார். எனவே அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்று தெரியவில்லை.
அபிதாபீவி கொலை தொடர்பாக அவரது வீடு அருகில் வசிக்கும் 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கொலை பற்றி அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.