பவானி, மார்ச் 27-
ஈரோடு மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் இன்று சிலர் குளித்துக்கொண்டிருந்தனர். ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடியதால் ஆற்றின் நடுப்பகுதிக்குச் சென்று உற்சாகமாக குளித்தனர்.
இந்நிலையில் இன்று பில்லூர் அணை திறக்கப்பட்டது. இதனை அறியாத பொதுமக்கள் ஆற்றில் திடீரென வெள்ளம் வந்ததும் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். ஆனால், நடுப்பகுதியில் இருந்து தப்பி வர முடியாத ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிலரை வெள்ளம் அடித்துச் சென்றது.
அவர்களில், ரவிச்சந்திரன் என்பவரின் மனைவி ராணி, மகள் ராஜேஸ்வரி மற்றும் ராஜேஸ்வரியின் இரண்டு குழந்தைகள் ஆகியோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். ரவிச்சந்திரன் நீந்தி கரையேறினார். உயிரிழந்தவர்களில் ராணி, ராஜேஸ்வரி மற்றும் ஒரு குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. மேலும் ஒரு குழந்தையின் உடலை தேடி வருகிறார்கள்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.