தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை மின்வெட்டுதான். கடந்த 5 ஆண்டுகாலமாக 3 மணிநேரத்தில் தொடங்கிய மின்வெட்டு 16 மணிநேரமாக உயர்ந்தது. கடந்த 2 ஆண்டுகாலத்தில் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டு என மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக ஓரளவிற்கு இருந்த மின்வெட்டு தற்போது மீண்டும் 12 முதல் 14 நேரமாக அதிகரித்துள்ளது.
கோடை காலம் தொடங்கியதை அடுத்து கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. காற்றாலை மின் உற்பத்தி அறவே இல்லாததால் நாள்தோறும் சராசரியாக கிடைக்க வேண்டிய 1500 கிலோ வாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மின் வெட்டு நேரம் படிப்படியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கிராமப்பகுதிகளில் அதிகபட்சமாக 12 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. நகர் புறங்களில் 10 மணி நேரம் மின் தடை உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டத்திலும், மதுரை மாவட்டத்திலும் மின்சாரத்தை மட்டுமே நம்பியிருந்த சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து விட்டன.
திருப்பூரில் காலை 6 மணி முதல் 9 மணிவரையிலும் மதியம் 12 மணி முதல் 4 மணி வரையிலும் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதைத் தவிர இரவில் 6 மணியில் தொடங்கி ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒருமுறை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இல்லத்தரசிகள் பாடோ பெரும் சிரமம்தான். தினந்தோறும் ஒரே மாதிரியான மின்தடை இருந்தால் சமாளித்துக் கொள்ளலாம். ஒவ்வொருநாளும் ஒவ்வொருமாதிரியாக மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதனால் சமைப்பது துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்வதற்கு சரியாக திட்டமிட முடியவில்லை என்கின்றனர்.
இன்வெர்ட்டர் போட்டிருந்தாலும் அதற்கு சார்ஜ் ஆக மின்சாரம் தேவை. ஆனால் அடிக்கடி தடை செய்யப்படும் மின்சாரத்தினால் இன்வெர்ட்டர் வைத்திருந்தும் பிரயோஜனம் இல்லை என்கின்றனர்.
ப்ளஸ் டூ மாணவர்கள் ஒருவழியாக தேர்வு எழுதி விட்டனர். இனி 10 வகுப்பு பொதுத் தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்களின் பாடுதான் திண்டாட்டமாக உள்ளது.
மின்தடை பிரச்சினையை தீர்க்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.