ரூ 12500 கோடி வரி ஏய்ப்பு வழக்கில் வோடஃபோனுக்கு சாதகமாக தீர்ப்பு!

 டெல்லி: 2.5 கோடி பில்லியன் (இன்றைய மதிப்பு ரூ12500 கோடி) வரி ஏய்ப்பு வழக்கில் வோடஃபோன் நிறுவனத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

ஹட்சிஸன் எஸ்ஸார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹட்ச் தொலைபேசி நிறுவனத்தின் 67 சத பங்குகளை பிரிட்டனைச் சேர்ந்த வோடஃபோன் நிறுவனம், 2007-ம் ஆண்டு ரூ 55000 கோடிக்கு வாங்கியது (11.5 பில்லியன் டாலர்).

இந்தப் பரிமாற்றத்துக்கு வரியாக ரூ 12500 கோடியை இந்த நிறுவனங்கள் தந்தாக வேண்டும் என வருவாய் வரித்துறை கூறியது. இது தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அரசுக்கு வரியாக வோடஃபோன் ரூ 12500 கோடி செலுத்த வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு போடப்பட்டபோது, நிலவிய டாலர் மதிப்புப்படி வோடபோன் தரவேண்டிய தொகை ரூ 11000 கோடி. இதில் ரூ 2500 கோடியை ரொக்கமாகவும், ரூ 8500 கோடியை வங்கி உத்தரவாதமாகவும் தரவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது வோடஃபோன் நிறுவனம். நிறுவனங்களின் செயல்பாடு இந்தியாவில் இருந்தாலும், பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களும் சர்வதேச நிறுவனங்கள் என்பதால், இதன் மீது இந்திய அரசு வரி விதிக்க முடியாது என வோடஃபோன் வாதாடியது.

இந்த பரிவர்த்தனையில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துக்கள் இந்தியாவில் உள்ளன. இந்த சொத்துதான் கைமாறுகிறது. எனவே வரி செலுத்தியாக வேண்டும். இந்த பரிவர்த்தனை நடந்தபோது, வோடஃபோன் நிறுவனம் 4.4 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீட்டு ஆதாய வரியைக் கழித்துக் கொண்டு மீதிப் பணம் தந்திருக்க வேண்டும். அதைச் செய்யாதது அவர்கள் தவறு, என்று மத்திய அரசு தரப்பில் வாதாடப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் பெஞ்ச், "வோடஃபோன் மற்றும் ஹட்சிஸன் எஸ்ஸார் நிறுவனங்களின் வர்த்தக எல்லை இந்தியாவில் இருந்தாலும், அவை வெளிநாட்டுக் கம்பெனிகள் என்பதால், அவற்றின் பணப் பரிவர்த்தனையில் வரி கேட்கும் உரிமை இந்திய அரசுக்கு கிடையாது. மேலும் நடந்த வர்த்தகத்தில் 4.4 பில்லியன் டாலர் முதலீட்டு ஆதாய வரியை திரும்பப் பெறும் நிலையில் வோடஃபோன் இல்லை. எனவே இதில் மத்திய அரசு வரி கேட்கக் கூடாது. மேலும் இவ்வாறு கேட்காமல் இருப்பதன் மூலம் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களின் நம்பிக்கையை பெற முடியும்," என வினோதமான தீர்ப்பை வழங்கியது.

மேலும் மு்பை நீதிமன்ற உத்தரவுப்படி வோடஃபோன் செலுத்திய ரூ 2500 கோடி ரொக்கம் மற்றும் ரூ 8500 கோடி வங்கி உத்தரவாதத்தை 4 வாரங்களுக்குள் திருப்பித் தரவேண்டும் என்றும் இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வோடஃபோனைப் போலவே 8 வெளிநாட்டு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு வழக்குகளில் சிக்கியுள்ளன. ஜிஇ, சாப் மில்லர், காட்பரி, ஏடி அண்ட் டி, சனோபி மற்றும் வேதாந்தா போன்ற நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி வரி செலுத்த வேண்டியுள்ளது.

வோடஃபோனுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு காரணமாக , மற்ற நிறுவனங்களும் அதனை மேற்கோள் காட்டி தப்பிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்தியாவில் வர்த்தகம் செய்யலாம், வருமானம் ஈட்டலாம், நிறுவனத்தை வாங்கி விற்கலாம், ஆனால் வரி மட்டும் செலுத்தத் தேவையில்லை என்ற புதிய நிலை பல்வேறு சிக்கலான கேள்விகளை எழுப்பியுள்ளது கார்ப்பொரேட் உலகில்.

குறிப்பிட்ட சிலவகை பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இதுவரை வரி விதிக்கப்பட்டு வந்தது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் தப்பித்து வருகின்றன. வோடபோன் - எஸ்ஸார் பரிவர்த்தனை முழுமையாக வரிவிதிப்புக்குட்பட்டதே என மத்திய அரசு நம்பியது. ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை என்று கூறி வோடபோனை விடுவித்துவிட்டது உச்சநீதிமன்றம்.

எனவே மத்திய அரசு வரும் 2013-ம் ஆண்டு வரிவிதிப்பு முறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன்படி இனி இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் அனைத்து பரிவர்த்தனைக்கும் வரி விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: