டெல்லி: நான் எதுவும் சொல்லத் தேவையில்லை, உண்மை தானாக வெளியே வரும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ரகசியங்களைக் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மாதுரி குப்தா தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் தகவல் தொடர்புத் துறை செயலாளராக இருந்தவர் மாதுரி குப்தா. அவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு இந்திய ரகசியங்களைக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு அவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். கடந்த 21 மாதங்களாக திகாரில் இருந்த அவர் கடந்த 7 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் இத்தனை நாட்களாக மௌனம் காத்து வந்த மாதுரி பிரபல ஆங்கில டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:
கேள்வி: கடந்த 21 மாதங்களாக திகாரில் இருந்தீர்கள். தற்போது ஜாமீனில் விடுதலையாகி இருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: சிறையில் இருந்தது என்னை வலுவான மனுஷியாக்கியுள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு வெளியே வந்துள்ளேன். இனி என் வாழ்க்கையை முதலில் இருந்து துவங்க வேண்டியதுள்ளது.
கேள்வி: இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாக உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பற்றி?
பதில்: அவை குற்றச்சாட்டுகள் தான், இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அது குறித்து பேச இது உகந்த நேரம் அல்ல.
கேள்வி: ராணா, ஜம்ஷெத் ஆகிய 2 பேருடன் நீங்கள் தொடர்பில் இருந்தீர்கள் என்பது உண்மையா? இன்னும் தொடர்பில் இருக்கிறீர்களா?
பதில்: நான் ஏற்கனவே கூறியதுபோன்று அது குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. அவை எல்லாம் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்று எனக்குத் தெரியும். வரும் மார்ச் மாதம் 22ம் தேதி இந்த வழக்கு விசாரணை துவங்குகிறது என்பது உங்களுக்கே தெரியும். நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை உண்மை தானாக வெளியே வரும். விசாரணை நடக்கும் போது மக்களே இது பற்றி தெரிந்து கொள்வார்கள்.
கேள்வி: நீங்கள் ஆப்கானிஸ்தான் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்ததுண்டா?, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதுண்டா?.
பதில்: நான் உருது மொழிபெயர்ப்பாளராக இருந்தேன். பாகிஸ்தானில் 12 முதல் 13 உருது நாளிதழ்கள் உள்ளன. அவை அனைத்தையும் படித்து மொழிபெயர்க்கவே எனக்கு நேரமில்லாமல் இருந்தது. அப்படி இருக்கையில் ரகசியங்களை எங்கே வெளியிடுவது என்றார்.
tamil.oneindia