தெரு சாக்கடையை அடைக்கக் கூட முதல்வர் உத்தரவாம்.. கருணாநிதி கிண்டல்

சென்னை: ஒரு தெரு சாக்கடையை அடைக்க, முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார் என செய்தி வருகிறது. எந்த விவகாரமாக இருந்தாலும் முதல்வர் தான் அறிவிக்கிறார். இதற்கு, தன்னுடைய பெயர் வர வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா அப்படி செய்வதில்லை. இன்னொரு அமைச்சரின் பெயர் வந்து விட்டால், அதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால், எல்லாம் முதலமைச்சர் உத்தரவிலேயே நடைபெறுகிறது என்றார் திமுக தலைவர் கருணாநிதி.

தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாநில பொதுச் செயலாளர் சிங்கார ரத்தினசபாபதியின் பவள விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்தது.

அதில், திமுக ஆட்சியில் மின்வாரியத்தில் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டதற்காக கருணாநிதிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய கருணாநிதி, ரத்தின சபாபதி மின் வாரியத்திலே பணியாற்றினாலுங்கூட, எந்த நேரத்திலும் திமுகவின் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர். தி.மு. கழகம் வேறு, மின் வாரியத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் வேறு என்று இல்லாமல் உறுதியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

நான் இந்த விழாவில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பேசிய நண்பர்கள் எல்லாம் குறிப்பிட்டார்கள். தொழிற்சங்கங்கள், அலுவலகர்களுக்கெல்லாம் திமுக அரசு எப்படியெல்லாம் நன்மைகளைச் செய்திருக்கிறது என்று சொன்னார்கள். ஆம், ஏராளமான நன்மைகள். அப்படி செய்த காரணத்தால் தான் இன்றைக்கு நாங்கள் அமைச்சர்களாக இல்லாமல் இருக்கிறோம்.

இருந்திருந்தால் இந்நேரம் இந்த விழாவிற்கு நானும், பேராசிரியரும் வந்திருக்க முடியாது. கேட்டால், அய்யா, அமைச்சரகத்திலே இந்த வேலை இருக்கிறது, டெல்லிக்குச் செல்ல வேண்டும், விவாதம் இருக்கிறது, முடியாது என்று சொல்லியிருப்போம்.

அமைச்சர்களாக இல்லாமல் இருப்பதும், எங்களுடைய தோழர்கள் இடத்திலே, எங்களுடைய தம்பிமார்களிடத்திலே நாங்கள் இன்னும் அதிகமாகப் பழகுவதற்கு இன்னும் அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கு- வழி வகுக்கின்ற ஒன்று என்பதால் சிலரால் ஓய்வாகக் கூட, பதவியில் இல்லாமல் கூட- நாம் பெறுகின்ற பதவி என்பது நமக்குப் போடப்படுகின்ற சிம்மாசனம் என்பது- உடன்பிறப்புகளுடைய உள்ளத்திலே போடப்படுகின்ற சிம்மாசனம் தான்.

திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு சர்வ சுதந்திரம் கொடுக்கப்பட்டது. இன்றைக்கு தமிழகத்திலே இருக்கின்ற நிலைமை என்ன?. தொழிலாளர்களை மிரட்டுகின்ற ஒரு நிலைமை இருக்கிறது. இன்றைக்கு கோரிக்கை என்று யார் வைத்தாலும், அவர்களைக் கடுமையாகத் தண்டிக்கின்ற- புறக்கணிக்கிற நிலைமை இருக்கின்றது. தோழமைக் கட்சியாக இருந்து, அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்கள் கோரிக்கை வைத்தால் கூட அரசு முகம் சுளிக்கிறது.

பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற விவகாரத்தில், ஜனநாயக விரோதமாக அரசு நடந்து கொள்கிறது. ஆசிரியர்களைப் பொறுத்து- அனைத்து ஆசிரியர் நியமனங்களையும் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டுமென்ற சர்ச்சை கூட நாள்தோறும் ஏடுகளில் பார்த்துக் கொள்ளலாம்.

வெண்புறாக்களைப் போல தமிழ்நாட்டிலே உள்ள மருத்துவமனைகளிலே உள்ள செவிலியர்கள் படுகின்ற பாட்டை கடந்த இரண்டு மூன்று நாட்களாக பார்க்கிறோம். அவர்கள் என்ன பாடு படுத்தப்படுகிறார்கள்? என்ன கேட்டு விட்டார்கள்?. அவர்களுக்கும், இந்த அரசுக்கும் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடிய விவகாரம் தான்.

வாருங்கள், பேசலாம் என்று அழைத்து, உங்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்டு, அதைக் கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்தினால், அவர்கள் இப்போதிருப்பதை விட அதிகமாக இரட்டிப்பு மடங்கு மகிழ்ச்சி அடைந்து செல்லக் கூடியவர்கள் தான். அந்தப் பெண்களை சித்ரவதை செய்கின்ற காட்சிகளையெல்லாம் பார்க்கும்போது என்னைப் போன்றவர்கள் எண்ணி கலங்காமல் இருக்க முடியவில்லை. ஆனால், அவர்களை சிறை பிடித்து, அரசு கொடுமைப்படுத்துகிறது.

அரசின் சார்பாக, அனைத்தையும் முதல்வர் ஜெயலலிதா செய்வதாக தான் அறிவிப்புகள் வருகிறது. வேறு யாரும் உத்தரவிடுவதில்லை. ஒரு தெரு சாக்கடையை அடைக்க, முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார் என செய்தி வருகிறது. எந்த விவகாரமாக இருந்தாலும் முதல்வர் தான் அறிவிக்கிறார். இதற்கு, தன்னுடைய பெயர் வர வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா அப்படி செய்வதில்லை. இன்னொரு அமைச்சரின் பெயர் வந்து விட்டால், அதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால், எல்லாம் முதலமைச்சர் உத்தரவிலேயே நடைபெறுகிறது என்றார் கருணாநிதி.
tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: