
இங்கிலாந்தில் டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு 92 முறை எழுத்து தேர்வில் பங்கேற்றும் ஒருவர் தேறவில்லை. வெளிநாடுகளில் டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு கடும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
முதலில் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதன் பிறகுதான் செயல்முறை தேர்வு வைக்கப்படும். இரண்டிலும் வெற்றி பெற்ற பிறகுதான் லைசன்ஸ் வழங்கப்படும். இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகரில் வசிக்கும் வாலிபர் ஒருவர் கார் டிரைவிங் லைசன்ஸ் வாங்க எழுத்துத் தேர்வில் பங்கேற்றார். ஆனால், வெற்றி பெறவில்லை. மனம் தளராத வாலிபர் தொடர்ந்து தேர்வு எழுதினார். 28 வயதே ஆகும் வாலிபர் இதுவரை 92 முறை தேர்வு எழுதி விட்டார். ஆனால், பாஸ் ஆகவில்லை. ஒரு மணி நேரம் நடக்கும் எழுத்து தேர்வில், சாலை விதிமுறைகள், விபத்தின் போது எப்படி செயல்படுவது, சாலையில் அசம்பாவிதம் நடந்தால் எப்படி செயல்படுவது போன்ற கேள்விகள் கேட்கப்படும். இதற்கு கட்டணம் ரூ.2400. இதுவரை 92 முறை எழுதிய தேர்வுக்கு மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிவிட்டது. எனினும், விடுவதாய் இல்லை. எப்படியும் டிரைவிங் லைசன்ஸ் வாங்கியே தீருவது என் வைராக்கியத்தில் அடுத்த தேர்வுக்கு தயாராகி வருகிறார் என்று இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாலிபரின் பெயர்தான் வெளியிடப்படவில்லை.
gnanamuthu