திவாகரன் வேட்டை தீவிரமடைகிறது...சசிகலா வீட்டில் ரெய்டு- 2 பேர் கைது

சென்னை: சசிகலாவின் தம்பி திவாகரனைத் தேடும் பணியை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். அவரைத் தேடி சசிகலாவின் சென்னை வீட்டில் புகுந்து போலீஸார் தீவிர வேட்டை நடத்தியுள்ளனர். அதேசமயம், இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், ரிஷியூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி கஸ்தூரி. இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தனது வீடு மற்றும் தனது மாமனார் மாணிக்கத்தின் குடிசை வீடு ஆகியவற்றை சசிகலாவின் தம்பியான மன்னார்குடியைச் சேர்ந்த திவாகரன், ரிஷியூர் ஊராட்சித் தலைவர் கிருஷ்ண மேனன், சிவசங்கரன், கணேசன், வைத்தியநாதன், தமிழ்ச்செல்வம், குணசேகரன் உள்ளிட்ட சிலர் சமீபத்தில் இடித்துவிட்டு, தன்னையும், தனது குடும்பத்தாரையும் தரக்குறைவாகப் பேசி, கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சேவியர் தனராஜிடம் கடந்த 21-ம் தேதி கஸ்தூரி புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் திவாகரனிடம் விசாரணை மேற்கொள்ள, அன்றைய தினமே மன்னார்குடியை அடுத்துள்ள சுந்தரக்கோட்டையில் உள்ள அவருக்குச் சொந்தமான செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரி மற்றும் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால், திவாகரன் அங்கு இல்லை.

2 பேர் கைது

இதைத்தொடர்ந்து, அவரது உதவியாளர்கள், நண்பர்கள், கார் ஓட்டுநர் உள்ளிட்டோரை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதேபோல, தஞ்சாவூரில் உள்ள திவாகரனுக்குச் சொந்தமான கல்லூரியின் முதல்வர் வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், கஸ்தூரி அளித்த புகாரின் பேரில் போலீஸார் தன்னைத் தேடுவதாகவும், எனவே, தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 23-ம் தேதி திவாகரன் மனு தாக்கல் செய்தார். 24-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை வருகிற 31-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கஸ்தூரியின் புகாரின் பேரில், திவாகரன் மற்றும் சிலர் மீது போலீஸார் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கஸ்தூரியின் வீட்டை இடிக்கப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தின் உரிமையாளர் ஒரத்தூர் சாம்பசிவம் மகன் வீரசிவசங்கரன் (40), பொக்லைன் ஓட்டுநர் மேலபூவனூரைச் சேர்ந்த பழனிவேல் மகன் சக்தி (23) ஆகிய இருவரையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து, நீடாமங்கலம் குற்றவியல் நடுவர் முன் முன்னிலைப்படுத்தினர்.

நீதிமன்ற நடுவர் செல்லபாண்டி, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் 15 நாள் சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். வீடு இடிக்கப் பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தலைமறைவாக உள்ள திவாகரன் உள்ளிட்டோரைக் கைது செய்ய நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், 4 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 9 ஆய்வாளர்கள் கொண்ட 9 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். சேவியர் தனராஜ் தெரிவித்துள்ளார்.

ஐபிசி 147 (கலகம் ஏற்படுத்துதல்), 448 (அத்துமீறி பிரவேசித்தல்), 294 (பி) (தகாத வார்த்தைகளால் திட்டுதல்), 506 (2) (கொலை மிரட்டல்), 120 (பி) (குற்ற சதி), பி.பி.டி (பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் திவாகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சசிகலா வீட்டில் ரெய்டு

இந்த நிலையில் திவாகரனைத் தேடி அவரது உறவினர்கள் ஒருவர் வீடு விடாமல் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையி்ல திவாகரனின் அக்காள் சசிகலாவின் வீட்டிலும் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள இளவரசியின் வீட்டில்தான் தற்போது சசிகலா தங்கியுள்ளார். சில நேரங்களில் நீலாங்கரையில் உள்ள பாஸ்கரன் வீட்டுக்குப் போய் விடுகிறார். ஆனால் சென்னையை விட்டு அழர் வெளியேறவில்லை.

இந்த இரு வீட்டிலும் திருவாரூர் போலீசார் நேற்று மாலையில் சோதனை நடத்தினர். அங்கு திவாகரன் தங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தினர். அங்கு அவர் இல்லை. சோதனை நடத்தும்போது சசிகலா அங்கு இருந்துள்ளார். அவரிடமும் போலீசார் விசாரித்ததாக கூறப்படுகிறது. தனக்கு திவாகரன் குறித்து எந்தத் தகவலும் தெரியாது என்று சசிகலா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: