11 புதிய சூரிய மண்டலங்கள், 26 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!

Kepler Space Telescope வாஷிங்டன்: நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே 26 புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா அனுப்பிய 'கெப்லர்' விண்கலம்.

இந்த 26 கோள்களும் நட்சத்திரங்களை (சூரியன்கள்) சுற்றி வருகின்றன. ஒவ்வொரு கோளும் தனது நட்சத்திரங்களை மிக நெருக்கமாக சுற்றி வருவதால், இவற்றில் வெப்பம் மிக மிக அதிகமாக இருக்கலாம் என்றும், இதனால் அங்கு உயிர்கள் வசிக்க வாய்பில்லை என்றும் நாஸா தெரிவித்துள்ளது.

'கெப்லர்' விண்கலம் ஒரு மாபெரும் விண் தொலைநோக்கியாகும். 2009ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கெப்லர் இதுவரை நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே 61 கோள்களைக் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த 26 கிரகங்களும் பல்வேறு அளவுகளில் உள்ளன. பூமியை விட ஒன்றரை மடங்கு பெரிய கிரகமும் உள்ளது. இன்னொன்று நமது சூரிய குடும்பத்தின் பெரிய கோளான ஜூபிடரை (வியாழன் கிரகம்) விட பெரிதாக உள்ளது. (நமது சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களையும் சேர்த்தால் எவ்வளவு பெரிதாக இருக்குமோ, அதைவிட இரண்டு மடங்கு பெரியது ஜூபிடர்).

இந்த 26 கிரகங்களும் 11 நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன. சில நட்சத்திரங்களை ஒரு கிரகமும், சில நட்சத்திரங்களை 5 கிரகங்களும் சுற்றிக் கொண்டுள்ளன. இதில் ஒரு கிரகம் தனது நட்சத்திரத்தை, மிக மிக நெருக்கமாக சுற்றிக் கொண்டுள்ளது. இது நமது சூரிய குடும்பத்தின் முதல் கிரகமான மெர்க்குரிக்கும் (புதன்) சூரியனுக்கும் இடையிலான தூரத்தை விடக் குறைவாகும்.

இதனால் அதில் பயங்கர அளவிலான வெப்பம் நிலவும் என்பதால் உயிர்கள் வாழ வாய்ப்பில்லை. மற்ற கிரகங்களும் மிக நெருக்கமாக நட்சத்திரங்களை சுற்றி வருவதால் அவையும் உயிர்களை சுமந்திருக்க வாய்ப்பில்லை என்கிறது நாஸா.

இந்த கோள்களில் சில 6 நாட்களுக்கு ஒரு முறையும், சில 143 நாட்களுக்கு ஒரு முறையும் தங்களது நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன.
tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: