சென்னை : மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது மக்களுக்குகான பணி என்பதால் இதனை நிறுத்த முடியாது என்று கூறிய நீதிமன்றம் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு நில ஆர்ஜிதம் செய்யும் பணி தொடங்கப்பட்டதில் இருந்தே பல கட்டங்களில் எதிர்ப்பு உருவாகிவருகிறது. இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை, மண்ணடி போன்ற பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை செல்வதால் பாதிப்பு ஏற்படும் என்று கூறி ஜார்ஜ் டவுன் கட்டட உரிமையாளர்கள் நல சங்கம் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுவதால் 5 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதற்கு எதிர் மனு தாக்கல் செய்திருந்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பொதுமக்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. மேலும் ஆழ்துளைகுழாய் கிணறு, கிணறுகளை மூடவும் அதற்கு நிவாரணமாக குடும்பங்களுக்கு வேறு கிணறுகளை அமைக்க ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வினோத் கே. சர்மா, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் இது மக்களுக்கு பயனளிக்கும் திட்டம் என்பதால் அதற்கு தடை கோரும் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தார்.
tamil.oneindia