இந்திய மார்க்கெட்டுக்காக ரூ.3 லட்சத்திற்குள் புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்திய கார் மார்க்கெட் வேகமாக வளர்ந்து வருவதால் எண்ணிலடங்கா கார் மாடல்கள் அடுத்தடுத்து அறிமுகமாகி வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் சிறிய கார்களுக்கான மார்க்கெட் ஓஹோவென இருப்பதால், பல முன்னணி நிறுவனங்கள் குறைந்த விலை கார்களை அறிமுகப்படுத்துவதற்கு ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டுக்காக ரூ.3 லட்சத்திற்குள் புதிய கார் மாடலை அறிமுகப்படுத்த நிசான் திட்டமிட்டுள்ளது. மார்க்கெட் லீடராக இருக்கும் ஆல்ட்டோவை விட குறைந்த விலையில் அதேவேளை தரமான கட்டுமானத்துடன் புதிய காரை அறிமுகப்படுத்த நிசான் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நிசான் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் ஆன்டி பால்மேர் கூறியதாவது:
"இந்திய வாடிக்கையாளர்களுக்கு தகுந்த அம்சங்களுடன் ரூ.3 லட்சத்திற்குள் புதிய காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். சென்னை ஆலையில் நவீன கார் உற்பத்தி வசதிகளை பெற்றிருக்கிறோம்.
எனவே, புதிய காரை வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் எந்தவித தடங்கள்களும் ஏற்படாது. நானோ கார் மற்றும் இருசக்கர வாகன உரிமையாளர்களை ஈர்க்கும் வகையில் எங்களது புதிய கார் இருக்கும்," என்றார்.
பஜாஜ் ஆட்டோ ஒத்துழைப்புடன் சிறிய காரை வடிவமைக்க ரினால்ட் மற்றும் நிசான் கூட்டணி திட்டமிட்டது. ஆனால், பஜாஜ் ஆட்டோ வடிவமைத்துள்ள சிறிய கார் எதிர்பார்த்த அளவு இல்லாததால் தனியாக சிறிய காரை உருவாக்க நிசான் திட்டமிட்டுள்ளது.
புதிதாக வடிவமைக்கப்படும் சிறிய கார் மூலம் விற்பனையில் இந்திய மார்க்கெட்டில் ஓரளவு நல்ல வளர்ச்சியை பெற முடியும் என்று நிசான் ஆணித்தரமாக நம்புகிறது.