அடிலெய்ட்: அடிலெய்ட் 4வது டெஸ்ட்டில் மீண்டும் ஒரு தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. 4வது நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 166 ரன்களில் தடுமாறியது.இன்னும் 334 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. மீதமிருப்பது ஒரே ஒரு நாள் ஆட்டம்தான். களத்தில் தற்போது இஷாந்த் சர்மாவும், சாஹாவும் உள்ளனர். எனவே இந்தியாவின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
4வது டெஸ்ட் போட்டியாவது நமக்குக் கிடைக்குமா என்ற சந்தேகம் தற்போது கிட்டத்தட்ட தெளிவாகி விட்டது. நிச்சயம் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பில்லை என்ற நிலை வந்து விட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும், விரக்தியும் அடைந்துள்ளனர்.
500 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா இன்று தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்ஸை இன்று 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. ரிக்கி பான்டிங் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்திருந்தார்.
2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இந்திய அணியில், வழக்கம் போல கம்பீர் முதல் ஆளாக வெளியேறினார். அவரது பங்கு 3 ரன்கள் மட்டுமே.
ஆனால் மறுபக்கம் வீரேந்திர ஷேவாக் திடீரென ஆவேசம் வந்தவர் போல ஆடத் தொடங்கினார். அதிரடியாக ஆடிய அவர் வெறும் 36 பந்துகளில் 50 ரன்களைக் குவித்து ஆஸ்திரேலியாவை அதிர வைத்தார். ஆனால் 62 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் அவுட்டாகி இந்திய ரசிகர்களை அதிர வைத்தார். 53 பந்துகளில் இந்த ரன்களை எடுத்தார் ஷேவாக். மொத்தம் 12 பவுண்டரிகளை ஷேவாக் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷேவாக் சற்று பொறுப்புடனும், பொறுமையுடனும் ஆடியிருந்தால் நிச்சயம் அவர் ஒரு சதம் அடித்திருப்பார். இந்திய வீரர்களுக்கும் அது பேருதவியாக இருந்திருக்கும். ஆனால் வழக்கம் போல வந்தார், அடித்தார், நொறுக்கினார், சென்றார். இது என்ன ஒரு நாள் போட்டியா அல்லது டுவென்டி 20 போட்டியா, இப்படிப் போட்டுத் சாத்துவதற்கு என்று ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
வெற்றி பெற முடியாவிட்டாலும் கூட குறைந்தது டிரா செய்யவாவது இந்திய வீரர்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர இப்படியெல்லாம் காட்டுத்தனமாக அடித்து ஆடி விக்கெட்களைப் பறி கொடுப்பது விவேகமல்ல என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.
ஷேவாக்குக்குப் பின்னர் யாருமே சரியாக ஆடவில்லை. கட்டையைப் போட முயற்சித்தும் கூட அது பலன் தரவில்லை. சச்சின் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
விவிஎஸ் லட்சுமன் நிதானமாக ஆடி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்த போதிலும் 35 ரன்களில் அவரும் விழுந்து விட்டார். விராத் கோஹ்லி தன் பங்குக்கு 22 ரன்களைச் சேர்த்தார்.
4வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 334 ரன்கள் எடுத்தால்தான் வெற்றி கிடைக்கும். ஒரு நாள் ஆட்டம் மட்டுமே பாக்கியுள்ளது.
குறைந்த ரன் வித்தியாசத்தில் தோல்வியா அல்லது நிறைய ரன் வித்தியாசத்தில் தோல்வியா என்பது மட்டுமே இப்போது நம் முன்பு உள்ள ஒரே சாத்தியக் கூறு.