அடிலைட்: அதிரடிக்குப் பெயர் போன வீரேந்திர ஷேவாக் வெளிநாட்டுத் தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வருவதை கவலை தருவதாக உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகிறார்கள்.அதிரடி ஆட்டத்திற்குப் பெயர் போனவர் ஷேவாக். எந்த மைதானமாக இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், எதிரில் இருப்பது பெரிய அணியா, சின்ன அணியா என்பது குறித்துப் பார்க்காமல் வந்த பந்தையெல்லாம் நோகும் அளவுக்கு அடித்து நொறுக்குவதுதான் ஷேவாக்கின் வழக்கம்.
இதுவே அவருக்கு தற்போது வினையாகியுள்ளது. கடந்த நான்கு வெளிநாட்டுத் தொடர்களில் ஷேவாக் பெரிய ஸ்கோர் எதையும் எட்டவில்லை. அவரது சராசரி 30ஐத் தொடவே இல்லை.
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் தற்போது ஆஸ்திரேலியத் தொடர்களில் ஷேவாக் பங்கேற்றுள்ளார். இதில் எதிலுமே அவர் பிரகாசிக்கவில்லை.
கடந்த 21 இன்னிங்ஸ்களில் அவர் 500 ரன்களைக் கூட எடுக்கவில்லை. இரண்டே இரண்டு முறை மட்டுமே அவர் 50 ரன்களைத் தொட்டுள்ளார். மேலும் இந்த 21 இன்னிங்ஸ்களில் 16 முறை அவர் வேகப் பந்து வீச்சாளர்களிடம் அவுட்டாகியுள்ளார்.
கேப்டனாக ஷேவாக் 3 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஆடியுள்ளார். மூன்றிலுமே இந்தியா தோற்றதில்லை. தற்போது அடிலைட் டெஸ்ட் போட்டிக்கும் அவர்தான் கேப்டனாகப் பணியாற்றப் போகிறார். எனவே அவரது கேப்டன் சென்டிமென்ட் அவருக்கு வெற்றி தேடித் தருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் அவர் 173 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரைப் போலவே இன்னொரு ஓப்பனரான கெளதம் கம்பீரும் கூட சொதப்பலாகவே ஆடி வருகிறார்.
ஷேவாக்கிடமிருந்து இந்திய அணி பெரிதாக எதிர்பார்க்கவில்லை. மிகப் பொறுமையாக ஒரு இரண்டு மணி நேரம் அவர் மைதானத்தில் இருந்தாலே போதும், ரன்களும் தானாக சேரும், அவரது பார்ட்னரும் சிறப்பாக ஆட உதவும், பின்னால் வரும் வீரர்களுக்கும் அது பேருதவியாக இருக்கும் என்பதே குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது.
அடிலைட் டெஸ்ட்டில் இதைச் செய்வாரா 'கேப்டன்' ஷேவாக்!
tamil.thatscricket