திமுக ஆட்சியே மாதிரியே உள்ளது, கொலை, கொள்ளை, வழிப்பறி குறையவில்லை-விஜயகாந்த் வேதனை

Vijayakanth சென்னை:திமுக ஆட்சியில் இருந்த அதே நிலையில்தான் காவல்துறை இப்போதும் இருக்கிறது. அந்த நிலை மாற வேண்டும் என்றுதான் மக்கள் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தனர். ஆனால் காவல்துறையினர் இன்னும் திமுகவினருடனான தொடர்புகளையும், பழக்க வழக்கத்தையும் தொடர்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

இதுதொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கடந்த ஆட்சியை மக்கள் அகற்றினர். ஆனால், போலீஸ் உயர் அதிகாரிகள் முதல் காவலர் வரை, கடந்த ஆட்சியாளர்களிடம் வைத்திருந்த தொடர்பும், பழக்க வழக்கமும், இன்று வரை தொடர்வதால், அவர்களுக்கு ஆதரவான நிலையையே, போலீசார் எடுத்து வருகின்றனர். இந்த நிலை மாறவேண்டும் என்பதற்காகவே, மக்கள் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தனர். ஆட்சி தான் மாறியதே தவிர, போலீஸ் துறையில் காட்சிகள் மாறவில்லை.

நாள்தோறும், மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் என, குற்றச்செயல்கள் நடந்து வருகின்றன. இதை தடுக்க வேண்டிய, போலீசார், கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்க்கிறார்களோ என்ற எண்ணம் எனக்கு மட்டுமல்ல, மக்கள் மனதிலும் எழுந்துள்ளது.

குறிப்பாக, சென்னை அருகில் உள்ள செங்கல்பட்டு நகரம், தொடர் கொலைகளால் கொலை நகராக மாறியுள்ளது. அங்குள்ள போலீசார், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றார்களா அல்லது அரசியல் பலம் வாய்ந்த ரவுடிகள், சமூக விரோதிகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. செங்கல்பட்டு நகராட்சி, தே.மு.தி.க., கவுன்சிலர் சுரேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளிகள் அரசியல், அதிகாரம், பணபலம் கொண்டவர்கள் என்பதால், அவர்கள் மீது போலீஸ் கரிசனப் பார்வை பார்க்கிறதா என்று தெரியவில்லை. இங்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் கொலைகள், செயின்பறிப்பு சம்பவம் அதிகரித்துள்ளன.

சென்னையில் ஒரே நாளில், 10 இடத்திலும், அரை மணி நேரத்தில், ஆறு இடத்திலும் செயின்பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. வங்கி அதிகாரியும், கணவன், மனைவியும் கொலை செய்யப்படுவதும், சென்னையில் நடக்கிறது.

இதை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய அரசு, போலீஸ் அதிகாரிகளை மாற்றுவதில் ஆர்வம் காட்டுகிறதே தவிர, இதுபோன்ற குற்றச் செயல்களை தடுக்க வேகம் காட்டுவதாக தெரியவில்லை.

ஆளும் கட்சி, ஆண்ட கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், போலீஸ் துறையில் தலையீடு தொடர்கிறது. இதை கட்டுப்படுத்தி, நடுநிலையோடு செயல்பட்டால் மட்டுமே, போலீசாரால் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: