மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்கள்..மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை

Karunanidhi சென்னை: தமிழக மீனவர்களை தொடர்ந்து சிங்கள கடற்படையினர் தாக்கி வருவதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் விபரீதமாகி விடும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை:

இலங்கையில் உள்ள மீனவர்களாலும், சிங்களவர்களாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதாக வருகின்ற செய்திகள், மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு சென்று, `அமைதியை ஏற்படுத்திவிட்டேன், இனி தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் எத்தகைய தொந்தரவும் இருக்காது' என்று உறுதியளித்து விட்டு திரும்பிய சூழ்நிலையில் வருகின்றன.

சற்றும் எதிர்பாராதவிதமாக இலங்கை சிங்களக் கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் தமிழக மீனவர்களை கொடுமையாகத் தாக்கி, அராஜகம் புரிந்துள்ளனர் என்பது தமிழக மக்களுக்கு மிகுந்த கொதிப்பேற்றும் செய்தியாகும்.

அமைதி திரும்பும் என்று மத்திய அமைச்சர் கூறுவதும், அப்படி அவர் சொன்ன வாசகங்கள் அனைத்தும் கடல் காற்றிலேயே கரைந்து போவதும் தொடர் நடவடிக்கைகளாக இருந்து வருகிறது. எனவே, இனி பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

விளைவுகள் விபரீதமாவதற்கு முன்பு உடனடியாக இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும், தாமதிக்காமல் தலையிட வேண்டும். தாமதத்தை பொறுத்துக் கொண்டு தமிழக மீனவர்கள், சிங்களவர்களாலும் சிங்கள ராணுவத்தினராலும் தாக்கப்படுகின்ற கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாதென்று எச்சரிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: