"வெளியிடப் பணிகளுக்கு (அவுட் சோர்சிங்) முக்கியத்துவம் கொடுக்கும், அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிகளவில் வரிச் சலுகைகள் காட்ட முடியாது. அதேநேரம் உள்நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்' என, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல்: அமெரிக்காவில், இந்தாண்டு நவம்பரில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. அதில் ஜனநாயகக் கட்சியின் சார்பில், அதிபர் வேட்பாளராக ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில், வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது.
கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்: ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில், அமெரிக்க காங்கிரசில் அதிபர் உரையாற்றுவது வழக்கம். இந்த உரை "ஸ்டேட் ஆப் யூனியன்' என அழைக்கப்படுகிறது. நேற்று முன்தினம், காங்கிரசில் உரையாற்றிய அதிபர் ஒபாமா, தேர்தலைக் கருத்தில் வைத்து, நாட்டு மக்களுக்கு தனது வாக்குறுதிகளை கவர்ச்சிகரமாக எடுத்துரைத்தார்.
ஏழை - பணக்காரன் வித்தியாசம்: இதுகுறித்து அவர் பேசியதாவது: அமெரிக்காவில் நிலவி வரும் ஏழை, பணக்காரன் வித்தியாசம் அதிகரித்து வருகிறது. இந்நிலை நீக்கப்பட வேண்டும். உழைப்பவர் அனைவரும் அதற்கான பலனை பெற வேண்டும். கடந்த, 2007-2009 பொருளாதார மந்தகதியில் இருந்து நாடு மீண்டு வருகிறது. இந்நிலையில், நான் இருக்கும் வரை, மீண்டும் அந்த மந்தத்திற்கு இட்டுச் செல்லும் அரசியல் கொள்கைகளை அனுமதிக்க மாட்டேன். நாட்டை மேலும் வளப்படுத்தும் அரசியல் கொள்கைகளையே நான் வலியுறுத்துகிறேன். முக்கியமாக, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
நிறுவனங்களுக்கு சலுகைகள்: படித்த அமெரிக்கர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், உள்நாட்டிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கும், அமெரிக்க நிறுவனங்களுக்கு நான் வரிச் சலுகைகள் வழங்குவேன். அதேநேரம், அயல்நாடுகளில் வெளியிடப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும், அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிகளில் சலுகை காட்ட முடியாது. அமெரிக்காவை முன்னேற்றும் ஒரு திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். அத்திட்டம், உற்பத்தியை மீண்டும் இங்கேயே துவக்குவதில் ஆரம்பிக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், வேலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிறுவனங்களுக்கு சலுகைகள் கிடையாது. வேலைகளை உள்நாட்டில் உருவாக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் உண்டு. அதிகமாக சம்பாதிப்போர் அதிகளவில் வரி செலுத்த வேண்டும்.
தவிர்க்க முடியாத சக்தி: உலகம் மாறி வருகிறது. உலகில் நடக்கும் ஒவ்வொரு செயலையும், நாம் கட்டுப்படுத்த முடியாது தான். ஆனால் இன்றும், உலக விவகாரங்களில் அமெரிக்கா ஒரு தவிர்க்க முடியாத, இன்றியமையாத சக்தியாக இருக்கிறது. நான் அதிபராக இருக்கும் வரை, அமெரிக்காவின் இந்த நிலையை காப்பாற்றி வருவேன். அமெரிக்கா வீழ்கிறது என்று கூறும் குடியரசுக் கட்சியினர், தாங்கள் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசுகின்றனர். ஈராக், ஆப்கனில் இருந்து ராணுவத்தை திரும்ப அழைத்ததன் மூலம் ராணுவத்திற்கான பட்ஜெட்டில் பல மில்லியன் டாலர்கள் சேமிக்கப்பட்ட அதேநேரத்தில், அமெரிக்கா தனது ராணுவத்தின் திறனை தக்க வைக்கும் புதிய பாதுகாப்புக் கொள்கை இந்த அரசுடையது. இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
gnanamuthu
