சென்னை: மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவது, ஆட்சிக்கு தரும் ஆதரவை விலக்கிக் கொள்வது என்ற முடிவை தன்னைக்கேட்டு தீர்மானிக்காததால் திமுக தலைமை மீது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கோபமாக இருக்கிறாராம். இதனால்தான் மற்ற அமைச்சர்களோடு போய் அவர் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கவில்லையாம்.
இருப்பினும் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உடன்பட்டு அவரும், அவரது ஆதரவாளரான அமைச்சர் நெப்போலியனும் தனியாக பிரதமரை சந்தித்து கடிதம் கொடுக்கவுள்ளனராம்.
திமுகவைப் பொறுத்தவரை இரண்டுகோஷ்டிகள் உள்ளன.ஒன்று அழகிரி கோஷ்டி, இன்னொன்று ஸ்டாலின் கோஷ்டி. கருணாநிதி இருக்கும் வரை அவருக்கு ஆதரவாக இருப்பது என்பது இன்னொரு கோஷ்டி.
சமீப காலமாக ஸ்டாலின் கோஷ்டியின் கை வலுத்து வருவதால் பல முக்கிய அழகிரி ஆதரவாளர்கள் அங்கே தாவிக் கொண்டுள்ளனர். அதேசமயம், எதிர்பாராத வகையில் சில முக்கிய ஸ்டாலின் ஆதரவாளர்கள் அழகிரி பக்கம் போயுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்த வீரபாண்டி ஆறுமுகம்.
அதேபோல இன்னொரு முக்கியமான நபர் நெப்போலியன். இவர் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரி மகன்தான். ஸ்டாலின் கோஷ்டியுடன் நெருக்கமான நட்பில் இருந்தவர்தான். ஆனால், ஏதோ ஒரு விவகாரத்தில் நேருவுக்கும், நெப்போலியனுக்கும் இடையில் ஆகாமல் போனது. நேரு கோஷ்டியினர், திருச்சியில் நெப்போலியனை புறக்கணிக்க ஆரம்பித்தனர். நேரு தம்பி ராமானுஜம் கொல்லப்பட்ட சமயத்திலும் கூட அஞ்சலி நிகழ்ச்சியில் நெப்போலியனை அவமானப்படுத்தும் வகையிலான நிகழ்வுகளை தொண்டர்கள் கண்டனர்.
இதை ஸ்டாலினும் கண்டு கொள்வதில்லை. இதனால் வெறுத்துப் போன நெப்போலியன் அழகிரி பக்கம் சாய்ந்து விட்டார். இந்த நிலையில்தான் அழகிரியும், நெப்போலியனும் ராஜினாமா கடிதம் கொடுக்க வராதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் திமுக தலைமை மீது கொண்ட அதிருப்தியால்தான் அழகிரி இன்னும் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. விலகல் முடிவு குறித்து திமுக தலைவர் கருணாநிதி தன்னிடம் ஏதுவும் பேசவில்லை,விவாதிக்கவில்லை என்பதுதான் அழகிரியின் முக்கிய வருத்தமாம். எனவேதான் மற்ற அமைச்சர்களோடு அவர் ராஜினாமா செய்யப் போகவில்லையாம்.