சென்னை: ப்ளஸ் டூ மொழிப்பாட முதல்தாள் தேர்வில் 6 மாணவர்கள் பிட் அடித்தபோது பறக்கும் படையினரால் பிடிப்பட்டனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மொழிப்பாடம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
மொத்தம் 2,020 தேர்வு மையங்களில் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். மாநிலம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தேர்வு மையங்களைத் தீவிரமாகக் கண்காணித்தனர்.
வினாத்தாள் கட்டு காப்பு மையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து எந்தவித முறைகேடான சம்பவங்களும் இன்றி தேர்வு அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொழிப்பாடம் முதல் தாள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதில் காப்பியடித்ததாக 6 மாணவர்கள் பிடிபட்டனர். கடலூர் மாவட்டத்தில் 1 மாணவரும், விழுப்புரம் மாவட்டத்தில் 3 மாணவர்களும், சென்னையில் 2 மாணவர்களும் காப்பியடித்தபோது பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.