புதுடில்லி:வரும், 15ம் தேதி வழங்கப்பட இருந்த, பாகிஸ்தானியர்களுக்கான, "குரூப் விசா,' நிறுத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா - பாக்., நாடுகளுக்கு இடையே, நல்லெண்ணம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளாக, இரு நாடுகளுக்கும் செல்ல விரும்புபவர்களுக்கு, விசா தளர்வு முறை, கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில், இந்திய வீரர் இருவர், ஜனவரி மாதம், கொடூரமாக கொல்லப்பட்டதை அடுத்து, விசா வழங்குவதில் கெடுபிடி விதிக்கப்பட்டது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இந்திய எல்லையில், "வந்ததும் வழங்கப்படும் விசா' முறை, ஜனவரி, 15ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.இம்மாதம், 15ம் தேதி முதல், பாகிஸ்தானியருக்கு, குரூப் விசா வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா ஏஜன்ட் மூலம், குறைந்தபட்சம், 10 பேர் முதல் அதிகபட்சம், 50 பேர் வரை சுற்றுலாவாக இந்தியா வந்தால், அவர்களுக்கு, குரூப் விசா வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதாலும், இரு தரப்பு உறவில் மேற்கொண்டு முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதாலும், குரூப் விசா வழங்குவது நிறுத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, மத்திய உள்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இது குறித்த முடிவு, உயர்மட்ட அளவில் எடுக்கப்படுகிறது. குரூப் விசா வழங்குவது குறித்து, இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை; எனவே, குரூப் விசா வழங்குவது அனேகமாக இருக்காது என, எதிர்பார்க்கிறோம்'' என்றார்.