லூகாஸ்:அமெரிக்காவில், 106 வயது மூதாட்டி, தன் பள்ளி சான்றிதழை, பல ஆண்டுகளுக்கு பின் பெற உள்ளார்.
அமெரிக்காவின், ஓஹியோ மாகாணத்தில் உள்ள, மவுன்ட் வெர்னான் பள்ளியில், ரெபா வில்லியம்ஸ் என்ற மாணவி, பல ஆண்டுகளுக்கு முன் படித்தார். உயர்நிலை வகுப்பு தேர்வில் அவர் தேர்ச்சியடைந்தாலும், அவருக்கு அப்பள்ளி, கல்வி சான்றிதழ் வழங்கவில்லை.
அப்பள்ளியின் ஆசிரியர் சொன்ன பாடத்தை படிக்கவில்லை என்பதற்காக, அவருக்கு சான்றிதழ் மறுக்கப்பட்டது. அதன் பின், சமையல்காரராக, பண்ணை ஒன்றில் அவர் பணிபுரிந்தார். தற்போது, 106 வயதாகும் அவர், அமெரிக்காவின் கொலம்பஸ் பகுதியில், தன் மகள் வீட்டில் வசித்து வருகிறார்.
இவருக்கு, இன்னும் பள்ளி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்ற தகவலை, ஆங்கில ஆசிரியர் ஒருவர், பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தார். இதையடுத்து, பல ஆண்டுகளுக்கு பின், அந்த மூதாட்டிக்கு பள்ளி சான்றிதழ் வழங்க, பள்ளி நிர்வாகம் முன் வந்துள்ளது.