புகையிலை தயாரிப்பு பொருட்களான சிகரெட், மெல்லும் புகையிலை, கைனி, ஹான்ஸ், பான்மசாலா, பான்பராக் போன்ற பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் புகையிலை தயாரிப்பு பொருள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் புகையிலை தயாரிப்பு பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரி வருகின்றன. இந்நிலையில் இந்தியா முழுவதும் புகையிலை பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் செய்யக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் புகையிலை பொருட்கள் தொடர்பான விளம்பரங்களுக்கு நாடெங்கிலும் தடை விதிக்கப்படுகிறது.
புகையிலை பொருட்களை பயன்படுத்துமாறு நேரடியாகவோ மறைமுகமாகவோ விளம்பரங்கள் செய்தல் கூடாது. டிவிக்கள் மற்றும் சினிமாக்களிலும் புகையிலை பொருட்களை பயன்படுத்துமாறு விளம்பரங்கள் செய்யக் கூடாது. போஸ்டர்கள், பேனர்களிலும் இதுபோன்ற வாசகங்கள் இருக்க கூடாது.
புகையிலை பொருட்களின் விளம்பரத்தால் வளர் இளம் பருவத்தினரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் நாடெங்கிலும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சிகரெட் பாக்கெட்டுகளில், ‘சிகரெட் பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு' என்று விளம்பரம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய சினிமா காட்சிகளில் புகை பிடிக்கும் காட்சி இருந்தால் அந்த இடத்தில் எச்சரிக்கை விளம்பரம் செய்யவும் உத்தரவிடப்பட்டது. அதே வகையில் தற்போது மெல்லும் புகையிலை, பான் மசாலா, சுபாரி போன்ற பொருட்களின் அட்டைகள் மீதும் ‘மெல்லும் புகையிலையை பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடு' என்ற எச்சரிக்கை வாசகத்தை பிரசுரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.