ஜெனிவா: இந்தியாவின் தலையீட்டாலும், இலங்கையின் கெஞ்சலாலும், தான் கொண்டு வந்த தீர்மானத்தை முடிந்த வரை நீர்த்துப் போகச் செய்து விட்டது அமெரிக்கா. நாளை இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தற்போது தயாராகி வருகிறது.
21ம் தேதி இத்தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படுகிறது. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்தத் தீர்மானத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித பெரிய பலனும் கிடைக்கப் போவதில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அந்த அளவுக்கு தண்ணீரை ஊற்றி தீர்மானத்தை நமுத்துப் போகச் செய்து விட்டனர்.
தற்போது இந்தத் தீர்மானத்தின் நகல் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தில் இலங்கையில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையரின் மேற்பார்வையில், சுயேச்சையான விசாரணை நடைபெற வேண்டும் என்று இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. இருப்பினும் சர்வதேச விசாரணை தேவை என்று இந்த தீர்மானம் சொல்லவில்லை. முதலில் அந்த வார்த்தை இருந்ததை. அதை பின்னர் நீக்கி விட்டது அமெரிக்கா.
முதலில் இந்தத் தீர்மானம் மார்ச் 12ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அதில் திருத்தம் செய்து புதிய ஒன்றை 18ம் தேதி சமர்ப்பித்தனர். மறுபடியும் அதில் இரு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் வலுவான தீர்மானமாக அது அமையாமல் போய் விட்டது.
இந்தத் தீர்மானம் 21ம் தேதி நிறைவேற்றப்படவுள்ள நிலையில், இது ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையில் உதவியாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் கூடவே எழுந்துள்ளது.
பிரதமருடன் சிவசங்கர் மேனன் சந்திப்பு:
இந் நிலையில் வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். இலங்கை விவகாரம் குறித்து அவர்கள் பேசியதாகத் தெரிகிறது.