டெல்லி: திமுக மத்திய இணையமைச்சர்களான பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன் ஆகியோர் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். ஆனால் மத்திய அமைச்சர் முக அழகிரி மற்றும் நெப்போலியன் ஆகியோர் இன்னும் ராஜினாமா கடிதத்தை அளிக்கவில்லை.
இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து நேற்று திமுக விலகியது. இதையடுத்து டி.ஆர்.பாலு தலைமையில் 5 திமுக அமைச்சர்கள் கொண்ட குழு நேற்று இரவு 10.30 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து லோக்சபாவில் உள்ள 18 திமுக எம்பிக்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதற்கான கடித்தத்தை அளித்தனர்.
இதையடுத்து இன்று காலை இணை அமைச்சர்களான பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.
ஆனால் கேபினட் அமைச்சரான முக அழகிரி மற்றும் நெப்போலியன் ஆகியோர் மட்டும் இன்னும் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கவில்லை.
அழகிரி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டாரோ என்று பலர் சந்தேகிக்கின்றனர். ஆனால் திமுக அமைச்சர்கள், எம்பிக்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் கோஷ்டியில் இருந்த நெப்போலியன் சமீபத்தில் அழகிரி கோஷ்டிக்கு மாறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.