ராஜபக்சேவை எதிர்த்துத் தீக்குளித்த கடலூர் மணி மரணம்

 Naam Tamilar Cadre Succumbs Injuries சென்னை: இலங்கையில் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி சிகிச்சை பலனளிக்காமல் சென்னையில்உயிரிழந்தார். 

கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் இயக்குநர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். நேற்று பகல் 12 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் கேனுடன் வந்த அவர், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியபடியே தமத் உடலுக்கு தீ வைத்துக் கொண்டார்.

உடல் முழுவதும் தீப் பற்றி எரிந்த நிலையில் அங்கிருந்தோர் தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மிகவும் ஆபத்தான நிலைமையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணி உயிரிழந்தார். 

முன்னதாக உயிருக்குப் போராடிய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மணி, தனித் தமிழீழம் அமைய வேண்டும்- இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக இந்த உலகம் அறிவிக்க வேண்டும். இதற்காக எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும். இதேபோல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிதி கிடைக்காமல் ஊழல்வாதிகள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துவிட்டனர். இதனால் ஊழலற்ற இந்தியா மலர வேண்டும். 

அன்னா ஹசாரே, அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோரது வலுவான லோக்பால் மசோதா கோரிக்கை நிறைவேறவும் எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும் என்றார். 

ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்-மணி உருக்கமான கடிதம் 

மேலும் இலங்கை பிரச்சனை தொடர்பாக மணி எழுதியுள்ள உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் அவர், 

இலங்கையில் 1 லட்சத்து 80 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும். ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் தனிநாடு பெற்று நலமுடன் வாழ வேண்டும். எனது குடும்பத்தினருக்கு நிறைய துன்பங்களை கொடுத்து விட்டேன். என் நினைவாக சிறிய கட்டிடம் கட்டுங்கள். என் உடல் மீது தேசிய கொடியை போர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

மணிக்கு சுலக்சனா என்ற மனைவியும், ஸ்ரீமதி என்ற மகளும், ஸ்ரீதர், ஸ்ரீபன் என்ற இரு மகன்களும் உள்ளனர். சுலக்சனா ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: