கோவை: என் வீட்டில் அடுப்பு பற்ற வைக்க வந்தபோது 54 வயது சரோஜினியை கட்டி அணைத்தேன். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அவரை கொலை செய்தேன். கடுமையாகப் போராடி கொலை செய்தேன. பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டிப் போட்டு விட்டு போய் விட்டேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் 24 வயதான யாசர் அராபத்.
கோவை அவினாசி சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் சரோஜினி. 54 வயதான இவர் கடந்த 21ம் தேதி தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார். அவரது துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடலை போலீஸார் கண்டுபிடித்தனர். இதனால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் கொலை வழக்கில் தற்போது யாசர் அராபத் என்ற 24 வயது வாலிபரை ஆந்திராவில் வைத்துப் போலீஸார் பிடித்துள்ளனர். அராபத் வேறு யாருமல்ல, சரோஜினியின் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசித்து வந்தவர்தான். கொலை செய்த பின்னர் இவர் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் பிடித்து விசாரித்தபோது பரபரப்பான வாக்குமூலம் அளித்தார் அவர்.
இதுகுறித்து அராபத் கூறுகையில், நான் மலேசியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் எந்த வேலைக்கும் செல்லவில்லை. இந்த அபார்ட்மென்ட்டில் மாதம் 30 ஆயிரம் வாடகைக்கு குடியேறினேன். அப்போது கையில் சில லட்சம் மட்டுமே பணம் இருந்தது. அதில் 7 மாதம் வாடகை கொடுத்தேன்.
பின், வாடகை தர பணம் இல்லை. இதனால் என்னுடன் பழக்கத்தில் இருந்த மலேசிய பெண் என்னுடன் சில நாள் தங்கி பணம் கொடுத்துச்சென்றார். அதுவும் செலவானது. பணப்பற்றாக்குறை ஏற்பட்டது.
கடந்த 13ம் தேதி வீட்டில் காஸ் அடுப்பு எரியாததால் சரோஜினியை அழைத்தேன். அவர் அடுப்பை பற்ற வைக்க குனிந்தார். அப்போது அவரை நான் அணைத்தேன். அவர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டதால் அவரது கழுத்தை நெறித்தேன். 10 நிமிடம் போராடி அவரை கொலை செய்தேன். பின், அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்தேன்.
சடலத்தை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்தேன். ஆனால், சரோஜினி குடும்பத்தினர் நடமாட்டம் இருந்ததால் கொண்டு செல்ல முடியவில்லை. கடந்த 21ம் தேதி வரை அவரது சடலத்துடனே வீட்டில் இருந்தேன்.
இக்கொலை குறித்து வெளியே கசிய ஆரம்பித்ததால் சிறிது நேரத்தில் பின்பக்க கதவு வழியாக வீட்டில் இருந்து வெளியேறினேன். பின், பஸ் மூலம் மங்களூர், கோவா, மும்பை, ஹைதராபாத் சென்றேன். பின் அங்கிருந்து விசாகப்பட்டினம் சென்றேன்.
போலீசார் தேடுவதை அறிந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும் ஏற்பட்டது. விசாகப்பட்டினத்தில் இருந்து தப்ப நினைத்தபோது போலீசார் என்னை பிடித்துவிட்டனர் என்றார் அவர்.