பொதுவாக கார் நிறுத்தும் பகுதிகள் பெரிய இடங்களிலோ அல்லது அடுக்குமாடிகள் கொண்டதாகவோ அமைக்கப்படுகிறது. ஆனால், கார் நிறுத்துவதற்கு பிரம்மாண்டமான இரட்டை கோபுரங்களை அமைத்துள்ளது ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம். வோல்ப்ஸ்பர்க் நகரிலுள்ள ஆட்டோஸ்டாடட் என்ற இடத்தில் ஃபோக்ஸ்வேகனின் ஆலைக்கு அருகில் விண்ணை தொடும் உயரத்தில் எழுந்து நிற்கும் இந்த இரட்டை கார் நிறுத்தும் கோபுரங்கள் பார்வையாளர்களை கவர்ந்த இடமாக மாறியிருக்கிறது.
கண்ணாடி மாளிகை போல் ஜொலிக்கும் இந்த கார் நிறுத்தும் கோபுரங்கள் பல விசேஷ வசதிகளை கொண்டிருக்கிறது. 60 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த இரட்டை கோபுரங்களில் ஒரு கோபுரத்தில் 400 கார்களை நிறுத்த முடியும். மேலும், இந்த இரட்டை கோபுரங்கள் பாதாளம் வழியாக ஃபோக்ஸ்வேகனின் ஆலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகனின் ஆலையில் தயாரிக்கப்படும் கார்கள் கன்வேயர் பெல்ட் வழியாக இந்த இரட்டை கோபுரங்களுக்கு தானியங்கி முறையில் கொண்டு வரப்படுகின்றன. அந்த கார்கள் லிப்ட் வழியாக கோபுரத்தில் நிறுத்தப்படுகின்றன.
இங்கிருந்து தேவையான போது டெலிவிரி பகுதிக்கு கார்கள் அனுப்பப்படுகின்றன. முழுவதும் தானியங்கி தொழில்நுட்பம் கொண்ட இந்த கார் பார்க்கிங் கோபுரம் ஜெர்மனி வருபவர்களின் முக்கிய சுற்றுலாப் பகுதியாகவும் மாறியிருக்கிறது. இந்த இரட்டை கோபுரங்களின் கீழ்த்தளத்தில் மியூசியம் மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார் பிராண்டுகளின் அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனி வருபவர்களின் முக்கிய சுற்றுலா மையமாக மாறியிருக்கும் ஃபோக்ஸ்வேவன் கார் இரட்டை கோபுரங்களின் அழகையும், கோபுரத்தில் கார்கள் நிறுத்தப்படுவதையும் காண்பதற்கு வாருங்கள்.



















