மதுரை: மனைவியைக் கொன்று எரித்து சூட்கேசில் வைத்து கண்மாயில் வீசிய வழக்கில் கைதான மெக்சிகோ நாட்டவர் மார்ட்டின் தனது அன்பு மகள் அடிலாவிடம் தான் சிறைக்குப் போவதாகவும், தன்னை மறந்துவிட வேண்டாம் என்றும் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்.மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த மார்ட்டின் மான்ரிக் (40) ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் ஆராய்ச்சி மாணவராக உள்ளார். இவரது 2வது மனைவி டெனிஸ் அகோஸ்டா (35) கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கலா மண்டலம் பல்கலைக்கழகத்தில் நடனம் கற்று வருகிறார். இவர்களது மகள் அடிலா (5) தந்தையுடன் தங்கி இருந்து பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 4ம் தேதி டெனிஸ் தனது கணவர், மகளை பார்க்க ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார். கணவர், குழந்தையுடன் தங்கி இருந்தார். 9ம் தேதி திருச்சூர் புறப்பட்டார். ஆனால், அவர் திருச்சூர் சென்று சேரவில்லை. திடீரென மாயமாகிவிட்டார். இதையடுத்து கிருஷ்ணன்கோவில் போலீசில் மார்ட்டின் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து டெனிஸை தேடி வந்தனர். இந் நிலையில் 11ம் தேதி திருப்பரங்குன்றம் அருகே ஆஸ்டின்பட்டி அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள கண்மாயில் சூட்கேசுக்குள் எரிந்த நிலையில் இளம்பெண்ணின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ஒரு கையும் வெட்டப்பட்டிருந்தது. அது டெனிஸின் உடல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவரை கணவர் மார்ட்டினே அடித்துக் கொலை செய்து உடலை சூட்கேசுக்குள் அடைத்ததும்,
அதில் இடம் போதாதால் கையை தனியே வெட்டி அதில் திணித்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் மார்ட்டின் கைது செய்யப்பட்டு திருநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது மகள் அடிலா அவரை விடாமல் அடம்பிடித்ததால் அவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தந்தையை விடாமல் கட்டிக்கொண்டே இருந்ததால் போலீசாரால் மார்ட்டினிடம் தங்களுக்கே உரிய பாணியில் விசாரிக்க முடியவில்லை. இதையடுத்து அடிலாவை பெண் எஸ்.ஐ.க்களிடம் வி்ட்டுவிட்டு மார்ட்டினை எஸ்.பி. அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.இதற்கிடையே அடிலாவுக்கு பிஸ்கட், பொம்மை, பழங்கள், கலப் பென்சில், நோட்டு கொடுத்தனர்.
விசாரணை முடிந்த பிறகு நேற்று முன் தினம் இரவு 7.30 மணி்க்கு மார்ட்டினை மீண்டும் திருநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தந்தையைப் பார்த்த சிறுமி ஓடிச் சென்று அவரது தோளில் சாய்ந்தாள். தந்தையும், மகளும் சுமார் 10 நிமிடத்திற்கும் மேலாக பேசாமல் கட்டிப் பிடித்து அழுது கொண்டே இருந்தனர். தனது மகளிடம் நான் சிறைக்கு செல்கிறேன். என்னை மறந்துவிடாதே. அத்தையும், பாட்டியும் வந்தவுடன் அவர்களுடன் நம் நாட்டிற்கு சென்றுவிடு என்று மார்ட்டின் கூறினார்.
இதைக் கேட்ட சிறுமி கதறி அழுதாள். அவள் அழுததைப் பார்த்து போலீசாரே கண்கலங்கிவி்ட்டனர். நேற்று காலை மார்ட்டின் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். முன்னதாக சிறுமி தான் வரைந்த குழந்தைப் படத்தை தந்தையிடம் கொடுத்து தனது ஞாபகமாக வைத்துக்கொள்ளுமாறு கூறினாள். மார்டினை அழைத்துச் சென்றவுடன் சிறுமி தரையில் புரண்டு கதறி அழுதாள்.
அடிலா 8 மாத குழந்தையாக இருந்ததில் இருந்தே அவளை மார்ட்டின் தான் வளர்த்து வந்தார். இந்நிலையில் குழந்தையை தன்னுடன் அனுப்புமாறு டெனிஸ் கேட்டவுடன் ஆத்திரமடைந்த அவர் கொலையாளியாகிவிட்டார். வெளிநாட்டவர்களை சென்னை புழல் சிறையில் தான் வைக்க வேண்டும் என்பதால் நேற்று மதியம் மார்ட்டின் புழலுக்கு மாற்றப்பட்டார்.
சிறுமி அடிலா மதுரையில் உள்ள விடியல் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளாள். விரைவில் அவளது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவாள்.