அசாமில் படகு கவிழ்ந்ததில் 103 பேர் பலி, 100 பேர் மாயம்: மீட்பு பணி தீவிரம்

 துப்ரி: அசாம் மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உள்பட 103 பேர் பலியாகினர். சுமார் 100 பேரைக் காணவில்லை.

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் தனியார் படகு ஒன்று 300 பயணிகளுடன் பிரம்மபுத்ரா ஆற்றில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீர் என்று வீசிய சுறாவளி காற்றில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் படகில் பயணம் செய்த அனைவரும் ஆற்றில் மூழ்கினர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 103 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். சுமார் 100 பேரைக் காணவில்லை.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 103 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்து துணை கமிஷனர் குமுத் சந்திரா கலிதா கூறுகையில்,

300 பயணிகளுடன் புறப்பட்ட படகு துப்ரிகாட்டில் நேற்று மாலை 4.20 மணியளவில் ஆற்றைக் கடக்க முயன்றபோது புயலில் சிக்கி கவிழ்ந்தது. இதில் அதில் பயணம் செய்தவர்களில் 25 பேர் நீந்தி கரையை அடைந்தனர். இதுவரை மீட்கப்பட்டுள்ளவர்களின் உடல்கள் துப்ரி சிவிக் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் நிலை குறித்து இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றார்.

துப்ரிகாட்டில் இருந்து மெடார்டரிக்கு சென்ற படகு புயலில் சிக்கி கவிழ்ந்தது. ராணுவம், எல்லைப் பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனே சம்பவ இடத்திற்கு வந்தபோதிலும் இருள் மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியவில்லை.

இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு உரிய இழப்பீடு வழங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

பிரதமர் அசாம் முதல்வர் தருண் கோகாயை தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடத்த கோகாய் உத்தரவிட்டுள்ளார்.

பிரம்மபுத்ராவில் மேலும் ஒரு படகு கவிழ்ந்ததில் 12 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: