சினிமாவில் எங்கும் பிரம்மாண்டம், எதிலும் பிரம்மாண்டத்தை காட்டி பிரம்மிக்க வைத்த இயக்குனர் ஷங்கர், தனது கார் விஷயத்திலும் தனது பிரம்மாண்ட எண்ணத்தை பிரதிபலித்துள்ளார் ஆம், உலகின் ஒவ்வொரு பணக்காரரும் விரும்பும் விஷயங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி இந்த முறை தனது பெயரை செய்தியாக்கியுள்ளார் ஷங்கர்.
பல கோடீஸ்வரர்களின் அந்தஸ்தின் அடையாளமாக ரோல்ஸ் ராய்ஸ் காரை கருதுகின்றனர். தமிழனை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ஷங்கரும் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் குடும்பத்தில் இணைந்துள்ளார். சுங்க வரி உட்பட ரூ.3 கோடி கொடுத்து வாங்கியுள்ள இந்த காருக்கு ரூ.45 லட்சம் செலவழித்து பதிவு செய்துள்ளார். அந்த காரில் அப்படி என்னதான் இருக்கிறது. இயக்குனர் ஷங்கர் கோஸ்ட்டுடன் ஒரு சிறு செய்திப் பயணம்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பான்டம் மற்றும் கோஸ்ட் ஆகிய 2 மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் வாங்கியிருப்பது கோஸ்ட். இந்த கார் சாதாரண ரகம் மற்றும் நீட்டிக்கப்பட்ட வீல் பேஸ் ஆகிய இரண்டு மாடல்களில் கிடைக்கிறது.
பொதுவாக, ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் சிறப்பு வாடிக்கையாளர்கள் விரும்பும் விஷயங்களுக்கு தக்கவாறு கஸ்டமைசேஷன் செய்து தரப்படுவதான். எனவேதான், ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் புக்கிங் செய்தாலும் டெலிவிரி பெறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது.
ஷங்கர் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார் 2240 கிலோ எடை கொண்டது. ஆடம்பரத்தை அள்ளி இறைக்கும் வெளிப்புற வடிவமைப்பு. முன்பக்க கிரில், ஹெட்லைட் என அனைத்திலும் கோஸ்ட் முழுவதும் ரோல்ஸ் ராய்ஸின் கைவண்ணம் பளிச்சிடுகிறது.
இந்த கார் 16 விதமான கலர்களில் கிடைக்கிறது. உங்களுக்கு விருப்பமான கலரை மிக்ஸிங் செய்தும் பெயின்ட்டிங் செய்து தருவார்கள். சுருக்கமாக சொன்னால், நீங்கள் நினைக்கும் கலரில் இந்த காரை பெற்றுக்கொள்ளலாம்.
ஏறி இறங்குவதற்கு ஏதுவாக இதன் கதவுகள் பிரத்யேகமான வடிவமைப்பை கொண்டுள்ளன. காரில் ஏறி உட்கார்ந்தவுடன் ஒரு விசாலாமான அறையில் உட்கார்ந்திருப்பது போன்ற அனுபவத்தை தரும். லெதர் இருக்கைகள் கண்ணை கவர்கிறது. இந்த இருக்கைகள் அனைத்தும் கையால் தைக்கப்படுகின்றன. லெதர் இருக்கைகளை தைப்பதற்கு பணியாளர்கள் இரண்டு வாரங்கள் எடுத்துகொள்கின்றனர்.
இதேபோன்று, ஸ்டீயரிங் வீல், டேஷ்போர்டு ஆகியவை தேக்கு மர வேலைப்பாடுகளால் நிறைந்திருக்கிறது. இந்த தேக்கு மரங்கள் கேரளாவிலிருந்து செல்கின்றன என்பது கொசுறு செய்தி. ஒட்டுமாத்தத்தில் ஒரு நகரும் மாளிகை போன்று கலை நயம் மிக்கதாக இருக்கிறது இதன் உட்புறம். மேற்கூரையில் சன்ஃரூப் எனப்படும் திறந்து மூடும் கண்ணாடி கூரை பொருத்தப்பட்டிருக்கிறது.
கோஸ்ட் காரில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளும் உண்டு. டைனமிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் ஆகியவை உண்டு. இதேபோன்று, இரவில் செல்லும்போது 300 மீட்டருக்கு முன்னால் வரும் பாதசாரிகள் மற்றும் விலங்குகள் குறித்து எச்சரிக்கை செய்யும் நைட்விஷன் அஸிஸ்ட் சிஸ்டமும் உண்டு.
காரின் முன்பக்கம், பக்கவாட்டு பகுதிகளில் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருக்கிறது.இதனால், எந்த பக்கத்திலிருந்து வாகனங்கள் மோதினாலும் பயணிகளுக்கு அதிக பாதுகாப்புக்கு உத்தரவாதம்.
செயற்கோள் இணைப்பு வசதியுடன் கூடிய கன்ட்ரோல் சென்டர் டிஸ்ப்ளே மூலம் ஏராளமான வசதிகளை பெறலாம். இதேபோன்று, வைன்ட் ஸ்கிரீன் கூறப்படும் முன்பக்க கண்ணாடியில் பூசப்பட்டிருக்கும் ஸ்பெஷல் கோட்டிங்கில் காரின் வேகம் உள்ளிட்ட விபரங்களை காணலாம். தலையை குனிந்து ஸ்பீடோ மீட்டரை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதால் கவனம் பிறழாமல் சாலையை கவனித்து ஓட்ட முடியும்.
இந்த காரில் 6.6 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 2.24 டன் எடை கொண்ட இந்த காரை வெறும் 4.7 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கிறது இந்த எஞ்சின். மேலும், இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிமீ வேகத்தில் செல்லும். ஆனால், நம்மூர் சாலைகளில் இந்த காரின் முழு வேகத்தை எட்டிப் பிடிக்க முடியுமா என்பது சந்தேகம்.யானை கட்டி தீணி போடுவது போன்றுதான் இந்த காரும். லிட்டருக்கு சராசரியாக 5 கிமீ செல்லும்.
ஆனால், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு இணங்க, இருக்கை முதல் ஸ்டீயரிங் வீல் வரை ஏராளமான கஸ்டமைசேஷன் வசதியை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தக்கவாறு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வழங்குகிறது.