இஸ்லாமாபாத்: அல்குவைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனின் 3 மனைவிகள் மற்றும் குழந்தைகள் இன்று காலை பாகிஸ்தானிலிருந்து சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லபடார். இதைத் தொடர்ந்து அவரது 3 மனைவிகள் மற்றும் குழந்தைகள் பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்டு வந்த விசாரணை முடிவடைந்தது. அனைவரும் பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக 45 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும் அவர்கள் ஏற்கெனவே இந்த சிறைத் தண்டனைக் காலத்தை அனுபவித்துவிட்டதால் அனைவரும் இன்று அதிகாலை சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
ஒசாமாவின் மனைவிகளில் ஒருவர் யேமனைச் சேர்ந்தவர். அவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சவூதி அரேபியாவிலிருந்து யேமனுக்கு நாடு கடத்தப்படுவர் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.