டெல்லி: சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த சில விவரங்களை இந்திய அரசிடம் கொடுக்க அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது. வெளிநாடுகளில் அதிலும் குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் தங்களின் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அதை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டிடம் அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள் குறித்து கேட்டதற்கு அந்நாடு முதலில் வழங்க மறுத்தது. ஆனால் தற்போது இந்தியர்களி்ன் ரகசிய கணக்குகளை இந்தியாவுக்கு தர சம்மத்திதுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே ஏப்ரல் 20ம் தேதியன்று ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இரட்டைவரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களை அடையாளம் காணக்கூடிய அளவிலான குறிப்பிட்ட விவரங்களைத் தர அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது. அவர்கள் தரும் விவரங்கள் நிச்சயமாக கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எவ்வளவு பணத்தை தனிநபர்கள் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளனர் என்பது உள்ளிட்ட முழுவிவரங்கள் கிடைக்காது என்றே தெரிகிறது. எனினும் சுவிட்சர்லாந்து தரும் விவரங்கள் இந்தியாவுக்கு அதிக அளவில் பயனளிக்கும் வகையில் இருக்கும் என்றே கருதப்படுகிறது. பெரும் போராட்டத்துக்குப் பின்னரே இந்த விவரங்களைத் தர சுவிட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்து மட்டுமின்றி ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும் இந்தியர்களின் கருப்புப் பணம் கோடிக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு இறுதி வரை, இந்தியர்களால் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.