சென்னை: சென்னை புறநகர் பகுதியில் வங்கிக் கொள்ளை முயற்சி மீண்டும் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை புறநகரான பள்ளிக்கரணையில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் இன்று அதிகாலை வங்கியி கிரில் கேட்டை அறுத்து உள்ளே சென்றுள்ளனர்.
உள்ளே நுழைந்த கும்பல் பெட்டகங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை உடைக்க முயற்சித்தது. ஆனால் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் கொள்ளையர்கள் அப்படியே தப்பி ஓடிவிட்டனர். இதனால் பெட்டக அறையில் இருந்த பல கோடி ரூபாய் பணம் தப்பியது.
இன்று காலை வங்கிக்கு வந்த ஊழியர்களும் பொதுமக்களும் வங்கி பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வங்கிக் கொள்ளை முயற்சி தலைதூக்கியுள்ளது.
சென்னை புறநகரான பெங்குடி மற்றும் மடிப்பாக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வங்கிக் கொள்ளை சம்பவம் நடந்தது. இக்கொள்ளைகளில் தொடர்புடையவர்கள் என்று கூறி புறநகர் வேளச்சேரியில் தங்கியிருந்த 5 வடமாநில இளைஞர்களை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றது சென்னை போலீஸ்.
இதைத் தொடர்ந்து சிறிது காலம் வங்கிக் கொள்ளை சம்பவங்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது போல் இருந்தது. தற்போது மீண்டும் புறநகர் பகுதியிலேயே கொள்ளையர்கள் கைவரிசயைக் காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.