
பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை குறைக்காவிட்டால், பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்துவோம் என்று மத்திய அரசுக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோலின் விலையை நிர்ணயம் செய்துகொள்கிற உரிமை, இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் இது தொடர்பாக மத்திய அரசின் அனுமதியை எண்ணெய் நிறுவனங்கள் பெற வேண்டி உள்ளது.
தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் தனக்கு ரூ.8.04 இழப்பு ஏற்படுவதாக இந்திய எண்ணெய்க் கழகம் (ஐ.ஓ.சி.) கூறுகிறது.
இந்திய எண்ணெய்க்கழகம், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை நிறுவ னங்கள் கூட்டாக தினந்தோறும் பெட்ரோல் விற்பனை மூலம் ரூ.49 கோடி இழப்பினை சந்தித்து வருகின்றன.
மத்திய அரசின் விலை நிர்ணய உரிமையின்கீழ் வருகிற டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகிவற்றின் விற்பனை மூலமாக இந்த பொதுத்துறை நிறுவனங்கள் நாள்தோறும் ரூ.573 கோடி இழப்பை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் இந்திய எண்ணெய் கழகத்தின் தலைவர் ஆர்.எஸ்.புட்டோலா, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘’நாங்கள் இதுவரை மிகவும் பொறுமை காத்து வந்திருக்கிறோம். எங்கள் (பெட்ரோல்) உற்பத்தி விலை உயர்ந்து கொண்டு வந்த போதிலும் கடந்த டிசம்பர் மாதத்துக்கு பின்னர் விலைகளை உயர்த்தவில்லை. நாங்கள் மக்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காக கடன்கள் வாங்குவதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.
கடந்த 2010-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை அரசிடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் ரூ.745 கோடி இழப்பை சந்தித்துள்ளன. அரசு உத்தரவுக்கு இணங்கி நடக்க வேண்டியிருப்பதால் அபூர்வமாகத்தான் விலை உயர்வு செய்ய முடிகிறது.
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை அரசு தற்காலிகமாக எங்களிடம் இருந்து விடுவித்து, உற்பத்தி விலைக்கும், விற்பனை விலைக்கும் உள்ள இடைவெளியை சரிக்கட்ட மானியம் (தினமும் ரூ.49 கோடி) வழங்கலாம் என யோசனை கூறி உள்ளோம்.
அதற்கு மாற்று என்று சொன்னால், வாடிக்கையாளருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்கிறபோது, ரூ.14.78-ஐ உற்பத்தி வரியாக மத்திய அரசு வசூலிப்பதை குறைக்கட்டும். எங்கள் யோசனையை அரசு ஏற்காவிட்டால், உடனடியாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8.04 உயர்த்துவதை தவிர (மாநில அரசின் வரிகள் தவிர்த்து) எங்களுக்கு வேறு வழி இல்லை’’ என்று கூறினார்.