டெல்லி: கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் உலை இன்னும் 40 நாள்களில் செயல்படத் தொடங்கும் என்று பிரதமர் அலுவலகத்துறை இணையமைச்சர் நாராயணசாமி கூறினார்.
தற்போது அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் கூடங்குளம் அணு நிலையத்தில் ஆய்வு நடத்தி வருவதாகவும், அவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் சான்றிதழ் அளித்துவிடுவர் என்றும், இதையடுத்து இன்னும் 40 நாட்களில் மின்சார உற்பத்தி தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர், கூடங்குளத்தில் ரூ.15,824 கோடியில் தொடங்கப்பட்ட அணு மின் நிலையம் உள்ளூர் எதிர்ப்பாளர்களின் போராட்டம் காரணமாக கடந்த 8 மாத காலமாக முடங்கியிருந்தது.
இந்த அணு மின் நிலையம் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்காத அளவுக்கு மிகுந்த பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டமான கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறப்பதற்கு மத்திய அரசுக்கு மாநில அரசு மிகுந்த ஒத்துழைப்பு தந்து வருகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் (Atomic Energy Regulatory Board-AERB) ஆய்வு நடத்தி வருகிறார்கள். அவர்கள் அணு மின் நிலையம் இயங்குவதற்கு இந்த வாரம் சான்றிதழ் அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அந்த சான்றிதழ் கிடைத்தவுடன் அணு உலைகளில் யுரேனியம் நிரப்பும் பணி தொடங்கும்.
அதன்பின் முதல் அணு உலையின் சோதனை ஓட்டம் இன்னும் 20 நாட்களில் தொடங்கும். அதன் பின்னர் முதல் அணு உலையில் இருந்து இன்று முதல் 40 நாட்களில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும்.
கூடங்குளம் மின் உற்பத்தி பணிக்காக கூடங்குளத்தில் இந்திய மற்றும் ரஷிய விஞ்ஞானிகள் 2,000 பேர் இரவு-பகலாக பணியாற்றி வருகிறார்கள்.
2 மாதத்தில் இரண்டாவது அணு உலை:
முதல் அணு உலை தனது மின் உற்பத்தி தொடங்கிய பின்னர் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 2வது அணு உலையில் இருந்தும் இன்னும் 2 மாதத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
