டெல்லி: பயணிகளுக்கான ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அக்டோபர் மாதம் முடிவு செய்யப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் ரயில்வே வாரியத் தலைவர் வினய் மிட்டல் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
எரிபொருள் மற்றும் மின் கட்டணத்திற்கு ஏற்ப சரக்கு கட்டணங்களை மாற்றும்(எஃப்.ஏ.சி.) புதிய முறைப்படி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் சரக்கு கட்டணம் 5.7 சதவீதம் உயர்கிறது. இந்த விலை உயர்வு மூலம் எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஏற்படும் ரூ.800 கோடி இழப்பு சரிகட்டப்படும். இந்த புதிய முறைப்படி 6 மாதத்திற்கு ஒரு முறை மறுஆய்வு செய்யப்பட்டு கட்டணம் மாற்றப்படும்.
எரிபொருள் விலை உயர்வுக்கேற்ப பயணிகள் கட்டணத்தை மாற்றும் நடைமுறை இன்னும் அமல்படுத்தப்படவில்லை. மேலும் பயணிகள் கட்டணம் கடந்த ஜனவரி மாதத்தில் தான் உயர்த்தப்பட்டதால் தற்போதைக்கு கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. ஆனால் வரும் அக்டோபர் மாதம் எரிபொருள் விலையால் ஏற்படும் கூடுதல் செலவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்போது பயணிகள் கட்டணத்தையும் எரிபொருள் விலைக்கேற்ப உயர்த்துவது குறித்து தீர்மானிக்கப்படும்.
எரிபொருள் விலைக்கேற்ப பயணிகள் கட்டணத்தை உயர்த்தும் நடைமுறை அமலுக்கு வந்தால் 6 மாதத்திற்கு ஒரு முறை பயணிகள் கட்டணம் மாற்றப்படும். இந்த புதிய நடைமுறை செயல்படுத்தப்பட்டால் அக்டோபர் மாதத்தில் பயணிகள் கட்டணம் 2 முதல் 3 சதவீதம் உயரும். ரயில்வே மொத்த செலவில் டீசல் மற்றும் மின் கட்டண செலவு மட்டும் 16 முதல் 17 சதவீதம் உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் டீசல் விலை 39 சதவீதமும், மின் கட்டணம் 8 சதவீதமும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.