புதுடில்லி: நாட்டையே உலுக்கிய மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் முதன்மை குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இவன் அணிந்திருந்த ஆடைகளை பயன்படுத்தி தூக்கலிட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
இதே நேரத்தில் அவன் உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டானா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கலிடப்பட்டானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ராம்சிங் அடித்து கொல்லப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டிருக்கிறான் என அவனது தாயார் புகார் கூறியுள்ளார். இது குறித்து அவரது தந்தை கூறுகையில்; அவன் தற்கொலை செய்ய மாட்டான். அவன் கொலை செய்ப்பட்டுள்ளான். இது குறித்து சி.பி.ஐ., விசாரிக்கட்டும் என்றார். இதனால் டில்லியில் ராம்சிங் கொலையா ? தற்கொலையா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பான முழு விவரத்தை தருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சிறைத்துறைக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதற்கிடையில் ஒரு உண்மையான குற்றவாளி இறக்கும் அளவிற்கு பாதுகாப்பு பணியில் உள்ள குறைபாடு குறித்து இன்று காலையில் பார்லி.,யில் பா.ஜ., எழுப்பிட திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர் ஷீலா தீட்ஷித் இன்று உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த தற்கொலை தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உறவினர்கள் கதறல் :
கற்பழிப்பு குற்றவாளியான ராம்சிங் தற்கொலை தொடர்பாக இவனது உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில்; நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ராம்சிங்கை சந்தித்தோம், இவரது மகனும் சந்தித்தான். அவன் சாவதற்கு ஒன்றுமில்லை. அவன் உண்மையிலேயே இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றனர். திகார் ஜெயில் பாதுகாப்பு குறித்து குற்றவாளி ராம்சிங்கின் வக்கீல் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளார். ராம் தூக்கு போட்டிருக்க மாட்டான் என்று கூறியிருக்கிறார்.
போலீசுக்கு தெரிவிப்பதில் தாமதம்: ராம்சிங் இறந்த தகவல் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் போலீசுக்கு தாமதமாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி டி. வி.,யில் வெளியான பின்னர்தான் போலீசுக்கு தகவல் போய்இருக்கிறது. போலீஸ் வருவதற்கு முன்னதாக ராம்சிங் உடல் அகற்றப்பட்டுள்ளது. என்ற தகவல் அவன் தற்கொலை செய்தானா என்ற சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
ராம்சிங் தாயார் கண்ணீர் :
தனது மகன் கொல்லப்பட்டிருக்கிறான். அவன் தற்கொலை செய்யவில்லை. என அவரது தாயார் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவன் சாகும் முடிவை எடுத்திருக்க மாட்டான். அவனை சக கைதிகள் அடித்து கொன்று தூக்கிலிட்டுள்ளனர் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது என கூறியுள்ளார். தந்தையும் இவ்வாறே கூறியிருக்கிறார்.
சிறைத்துறை விளக்கம்: இந்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ராம்சிங் இறந்தது தொடர்பாக பிரதே பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே என்ன நடந்தது என்று சொல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய சம்பவத்தின் குற்றவாளி இன்று தற்கொலை செய்து கொண்டதால் டில்லி அரசியலில் காங்கிரசுக்கு எதிராக மேலும் ஒரு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. ராம்சிங் இறந்து போய் விட்டதால் மற்ற கைதிகளின் பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.