சேலம்: சேலத்தில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொத்தடிமைகளாக இருந்த 2 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
சேலம் அஸ்தம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சூசைராஜ் தலைமையில் போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஜான்சன்பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செல்லும் இடம் அறியாது விழித்துக் கொண்டிருந்த 2 சிறுமிகளைப் பார்த்த போலீசார் அவர்களை சைல்டு லைன் அமைப்பில் ஒப்படைத்தனர். அதன் பிறகு அந்த 2 பேரும் குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.
அவர்கள் காந்தி சாலையில் உள்ள லைஃப் லைன் பெண்கள் வரவேற்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரபு, குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் சேவியர் ஆகியோர் சிறுமிகளை விசாரித்தனர்.
விசாரணையில் தெரிய வந்த விவரம் வருமாறு,
சிறுமிகள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வகிதா பானு(16) மற்றும் ரூபிநிஷா பானு(13) ஆகும். அவர்களின் உறவினர்கள் அவர்களை சேலம் செவ்வாய்ப்பேட்டையில் ஜவுளிக்கடை வைத்திருக்கும் உபயத் ரகுமானிடம் ஒப்படைத்துள்ளனர். ஜான்சன்பேட்டையில் உள்ள உபயத் ரகுமானின் வீட்டில் அவர்கள் கடந்த சில மாதங்களாக வீட்டு வேலை செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி திண்டுக்கல் செல்ல முடிவு செய்தனர்.
வகிதா பானு ரூ.40,000க்கும், ரூபிநிஷா பானு ரூ.15,000க்கும் கொத்தடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர். உபயத் ரகுமான் வீட்டில் உள்ளவர்கள் சிறுமிகளுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் அதிகமாக வேலை வாங்கி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். கழிவறையை சரியாக சுத்தம் செய்யவில்லை என்பதற்காக அங்கேயே உட்கார்ந்து உணவு உண்ண வைத்துள்ளனர்.
சிறுமிகளை விசாரித்த பிறகு அவர்களை கொடுமைப்படுத்தியவர்கள் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல்- வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2013-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப் போவதாக குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் சேவியர் தெரிவித்துள்ளார்.