சென்னை: திமுக வட்டாரத்தை சலசலப்புக்குள்ளாக்கிய வெளிநாட்டுக் கார் இறக்குமதி ஊழல் தொடர்பான சிபிஐ சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ள தொடர்பு குறித்த பின்னணித் தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.
மிகவும் விலை உயர்ந்த சொகுசுக் காரான ஹம்மர் காரை வாங்கியதில்தான் பிரச்சினை வெடித்தது. இந்தப் பிரச்சினையின் முக்கியப் புள்ளி அலெக்ஸ் ஜோசப் என்பவர்தான். இவர் ஒரு கார் கடத்தல்காரர்.
அலெக்ஸ் ஜோசப் வெளிநாடுகளிலிருந்து ரூ. 500 கோடி மதிப்புள்ள கார்களை வாங்கி இந்தியாவில் பலருக்கும் விற்றார்.அவரிடமிருந்து கார் வாங்கியவர்களில் ஒருவர்தான் உதயநிதி ஸ்டாலின். காரை விற்ற ஜோசப் உரிய வரியை இந்தியாவில் கட்டாததால்தான் தற்போது உதயநிதி உள்ளிட்டோர் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர்.
மத்திய வருவாய் புலனாய்வு -அதாவது டிஆர்ஐ- அதிகாரிகளின் வலையி்ல் சிக்காமல் நீண்ட காலமாக தப்பி வந்தவர்தான் இந்த அலெக்ஸ். இவரை 2000மாவது ஆண்டு முதலே டிஆர்ஐ அதிகாரிகள் தேடி வந்தனர்.
ஆனால் பத்து வருட தலைமறைவுக்குப் பின்னர் 2011ம் ஆண்டு ஹைதராபாத்தில் வைத்து சிக்கினார் அலெக்ஸ்.
இவரிடம் டிஆர்ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது அவர் வெளிநாடுகளிலிருந்து 400 கார்களை இவர் வாங்கியதாகவும், இதன் மதிப்பு பல நூறு கோடி என்றும் தெரிய வந்தது. மேலும் இவர் ரூ. 500 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரிய வந்தது.

இந்த அலெக்ஸ் வாங்கி விற்ற 400 கார்களில் ஒன்றைத்தான் உதயநிதி ஸ்டாலின் வாங்கியுள்ளார். இதனால்தான் அவரும் சிக்கலுக்குள்ளாகி விட்டார்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை அலெக்ஸ் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர் -அதாவது அக்யூஸ்ட்- ஆவார். மற்றபடி உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கார் வாங்கிய அத்தனை பேருமே சாட்சிகள்தான். இந்த வழக்கு முடிந்ததும், அனைவரிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட ஹம்மர் உள்ளிட்ட சொகுசுக் கார்களை சிபிஐ திருப்பிக் கொடுத்து விடுமாம்.