இட்லி, தோசை மீது இரட்டை வரி விதித்துள்ள மத்திய அரசு அதை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை ஓட்டல்கள் சங்கத் தலைவர் கே.டி.சீனிவாசராஜா கூறியது:
மத்திய அரசின் 2013-14-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குளிர் சாதன வசதி கொண்ட உணவகங்களில் வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களின் மீது 4.944 சதவீத சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது.
முழுமையான குளிர் சாதன வசதி இல்லாமல் ஓட்டலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருந்தாலும் ஒட்டு மொத்த உணவகத்துக்கும் இந்த வரி விதிப்பு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களின் மீது சேவை வரி விதிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே விற்பனை என வகைப்படுத்தி அறிவிக்கப்பட்ட ஒரு வர்த்தகப் பரிவர்த்தனையின் ஒரு பகுதியை சேவை என மாறுபடுத்தி மத்திய அரசு சேவை வரி விதிப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது. இந்த இரட்டை வரி விதிப்பின் சுமை, ஏற்கெனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள் மீதே விழும்.
நடுத்தர மக்கள் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட உணவகங்களில் உணவருந்தும் சொற்ப சந்தோஷத்துக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டில் முற்றுப்புள்ளி வைத்திருப்பது வருந்தத் தக்கது. எனவே, குளிர்சாதன உணவகங்களின் மீதான மத்திய அரசின் சேவை வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றார்.