திவாகரன் சேலத்தில் கைது?

Divakaran சென்னை: சமீப காலம் வரை அதிமுகவில் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்தவரும், சசிகலாவின் சகோதரருமான திவாகரன் இன்று சேலத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது. 

அதிமுக மற்றும் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனிலிருந்து சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வெளியேற்றப்பட்டதிலிருந்து, தமிழக அரசியல் என்பதே ஜெயலலிதா - சசிகலா பிணக்கு, மோதல், விரட்டல், பணப் பதுக்கல் தொடர்பானதாக மாறிவிட்டது.

சமீப காலமாக சசிகலாவின் உறவினர்கள் யாராவது ஒருவர் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வன்முறை, சட்டமீறல் போன்றவற்றுக்காக போலீசாரிடம் புகார் கொடுப்பதும், அவர்களை விரட்டிக் கொண்டு போலீஸ் படை செல்வதுமான காட்சிகள் தொடர்கின்றன.

சமீபத்தில் சசிகலாவின் மற்றொரு நெருங்கிய உறவினர் ராவணன் பல்வேறு புகார்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் வரை இவர் ஆட்சியிலும் அதிமுகவிலும் மிகுந்த அதிகாரமும் செல்வாக்கும் மிக்கவராகத் திகழ்ந்தவர். விரைவில் அவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கூறப்படுகிறது.

இப்போது அடுத்ததாக, திருவாரூர் மாவட்டம் ரிஷியூர் கீழத்தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியனின் தொகுப்பு வீடு மற்றும் அவரது தந்தை மாணிக்கத்தின் வீடு ஆகியவற்றை இடித்த புகாரின் பேரில் திவாகரனைக் கைது செய்ய போலீஸ் தீவிரமுயற்சி மேற்கொண்டது.

திவாகரன் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் அவரைக் கண்டுபிடிக்க தமிழகம் மற்றும் அவருக்கு தொடர்புள்ள வேறு நகரங்களிலும் தேடுதல் தீவிரமாக நடந்தது.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சேலத்தில் வைத்து அவரை போலீசார் கைது செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்களை போலீசார் உறுதிப்படுத்தவோ, மறுக்கமவோ இல்லை. விவரம் கேட்டால் மழுப்பலாகக் கூறிவருகின்றனர்.

மன்னார்குடி, சிவகங்கை, சேலம் பகுதிகளில் தீவிரமாக அவரைத் தேடி வந்த போலீஸ் படை, இன்று காலை சேலத்தில் திவாகரனைப் பிடித்துவிட்டதாகவும், தகவலை இப்போது ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

திவாகரன் கைது என்பது வெறும் வீடு இடிப்பு தொடர்பானது மட்டுமல்ல என்பதால், முழுவதுமாக தகவல்களைக் கறந்த பிறகே அவரை வெளியே காட்டுவார்கள் என்கிறது காவல்துறை வட்டாரம்!
tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: