லக்னோ: உத்திரபிரதேச சட்டசபை தேர்தல் அறிக்கையை பா.ஜ.,கட்சி இன்று வெளியிட்டது. மீண்டும் அயோத்தியில் ராமருக்கு கோயில் எழுப்புவது, வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை, மத ரீதியான இடஒதுக்கீட்டை அமல்படுத்த விட மாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளது. இதனையடுத்து வெளியிடப்பட்ட தேர்தல் காங்., தொலைநோக்கு திட்ட அறிக்கையில் மாநிலத்தின் முக்கிய பிரச்னையான வேலையின்மையை அகற்றி வரும் 5 ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு வேலை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இதனை மத்திய அமைச்சர் சல்மான்குர்ஷித் கூறியுள்ளார்.
இந்த மாநிலத்தில் தேர்தல் பணி சூடு பிடித்துள்ளது. மாநிலத்தில் ஆளும்கட்சியான பகுஜன்சமாஜ் கட்சி தங்களுடைய தேர்தல் அறிக்கைகையில் இலவசங்களுக்கு முக்கியத்தும் கொடுத்துள்ளது. பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். இன்று மாநில பா.ஜ., தலைவர் சூரியபிரசாத் ஷாகி, உமாபாரதி, முக்தர்அப்பாஸ்நக்வி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையைவெளியிட்டனர். இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ராமர் பிறந்த அயோத்தியில் கோயில் கட்டும் பணிக்கு காங்., பகுஜன்சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் இருக்கும் முட்டுக்கட்டைகளை களைந்து கோயில் கட்டியே தீருவோம் ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் இது நடக்கும் . இது இந்த நாட்டு மக்களின் உணர்வுப்பூர்வமான எதிர்பார்ப்பு என்றார் ஷாகி.
மாயாவதி எழுப்பியுள்ள பூங்கா மற்றும் நினைவிடங்கள் ஆகியன குறித்து ஆராயப்படும். இவர் காலத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க ஒரு கமிட்டிஅமைக்கப்படும். நாட்டிற்கு மிக ஆபத்தாக இருக்கும் இருக்கும் சிறுபான்மையினருக்கான 4. 5 சத இட ஓதுக்கீடு ரத்து செய்யப்படும். மாநில முதல்வர் லோக்அயுக்தாவிற்குள் கொண்டு வர கட்சி பாடுபடும். இதன் மூலம் ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்க முடியும். இலவச மடிக்கணினி வழங்கப்படும். வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.