பசுபதி பாண்டியனைக் கொல்ல உத்தரவிட்டது சுபாஷ் பண்ணையார்- எஸ்.பி.

Pasupathi Pandian திண்டுக்கல்: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் துப்பு துலங்கி விட்டது. தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார்தான் இந்த கொலையைத் தூண்டி கூலிப்படையை ஏவி விட்டவர் என்று திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். மொத்தம் 14 பேர் கொண்ட கும்பல் இந்த கொலைச் சதியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன், திண்டுக்கலில் கடந்த 10ம் தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆறுமுகச்சாமி, அருளானந்தன் ஆகியோர் வள்ளியூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

அவர்களை திண்டுக்கல் போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் கொலைக்கான காரணம், செய்தது யார், ஏவியது யார் என்பது தெரிய வந்துள்ளதாக எஸ்.பி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எஸ்.பி. ஜெயச்சந்திரன் கூறுகையில், பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் சரணடைந்துள்ள இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்றது.

இதில் துப்பு துலங்கியது. மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையாரின் தூண்டுதலின் பேரில்தான் இந்தக் கொலை நடந்துள்ளது. மொத்தம் 14 பேர் இதில் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களில் அருளானந்தன் மற்றும் ஆறுமுகசாமி மட்டும் சிக்கியுள்ளனர். எஞ்சியவர்களையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பசுபதி பாண்டியனை கொலை செய்துவிட்டு, கொலையாளிகள் மூவரும் அவ்வழியாக வந்த லாரியை மறித்து, அதில் ஏறி கரூருக்கு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து பிரிந்து சென்றுள்ளனர்.

கொலை நடந்த நந்தவனப்பட்டியில் கொலையாளிகள் தங்க நிர்மலா என்பவர் வீடு கொடுத்து உதவியுள்ளார் என்றார் ஜெயச்சந்திரன்.

யார் இந்த சுபாஷ் பண்ணையார்?

சென்னையில், மாநகர காவல்துறை ஆணையராக விஜயக்குமார் பதவியில் இருந்தபோது போலீஸாரால் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டவர் வெங்கடேஷ் பண்ணையார். இவரது தம்பிதான் சுபாஷ் பண்ணையார்.

பண்ணையார் குடும்பத்துக்கும், பசுபதி பாண்டியனுக்கும் இடையே நீண்ட காலமாகவே பகை உள்ளது.இவர்களின் முன்பகை காரணமாக இரு தரப்பிலும் பல தலைகள் விழுந்துள்ளன.

சுபாஷ் பண்ணையாரின் தாத்தா சிவசுப்பிரமணிய நாடார், தந்தை அசுபதி ஆகியோர் பசுபதி பாண்டியன் தரப்பால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு எப்போதும்வென்றான் அருகே பசுபதி பாண்டியனின் மனைவி ஜெசிந்தா பாண்டியன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டது தொடர்பாக எப்போதும்வென்றான் காவல்நிலையத்தில் இவர் மீது வழக்கு உள்ளது.

இது தவிர ஆறுமுகநேரி, ஆத்தூர் காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. சுபாஷ் பண்ணையார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இவர் மீது ஏராளமான கொலை வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சரணடைந்துள்ள அருளானந்தன், சுபாஷ் பண்ணையாரின் சொந்த ஊரான மூலக்கரையை அடுத்துள்ள முள்ளக்காடை சேர்ந்தவர். அருளானந்தன் மீது தூத்துக்குடி ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.

இன்னொருவரான ஆறுமுகச்சாமி, 2007ல் கேரளாவில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற மீன் வேனை கடத்தியது தொடர்பாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானவர். 2008ம் ஆண்டு சுரண்டை அருகே குருங்காவனம் நாட்டாமை பெரியசாமியை கொலை செய்த வழக்கிலும் இவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், இவர் மீது பாவூர்சத்திரம், சுரண்டை காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
tamil.oneindia
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: