சீக்கியர்களின் புனித் தலமான பொற்கோவில் பற்றி கிண்டல் செய்த, அமெரிக்காவின் பிரபல "டிவி' தொகுப்பாளருக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் என்.பி.சி., "டிவி'யில், "தி டுனைட் ÷ஷா' என்ற புகழ் பெற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜே லெனோ என்பவர்.
இந்நிகழ்ச்சியில் கடந்த 19ம் தேதி, பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவில் காட்டப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த லெனோ, "இக்கோவில் அநேகமாக, குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியின் கோடை வாசஸ்தலமாக இருக்க வாய்ப்புள்ளது' எனக் கிண்டல் செய்திருந்தார். இதையடுத்து அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள், லெனோவின் மின்னஞ்சலுக்கு புகார் அனுப்பினர். இதற்காகவே, "பேஸ்புக்' சமூக வலைத் தளத்தில் தனிப் பக்கம் திறந்து, அதில் லெனோவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி, இதுகுறித்து நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: லெனோவின் கிண்டல் கண்டனத்திற்குரியது. துரதிர்ஷ்டவசமானது. பொற்கோவில் சீக்கியர்களின் புனிதத் தலம். புத்தாண்டிற்கு எங்கள் பிரதமர் அத்தலத்திற்குச் சென்று வழிபாடு செய்துள்ளார். இதை லெனோ அறியாமல் இருந்திருக்க மாட்டார். இதுபோன்ற சம்பவங்கள், இனி அமெரிக்காவின் எந்த ஊடகத்திலும் நடக்கக் கூடாது. இதுகுறித்து, அமெரிக்க அரசு கவனிக்க வேண்டும். ஊடக சுதந்திரம் என்பது, பிறரது உணர்வுகளை புண்படுத்துவது அல்ல. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி இந்தியத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வயலார் ரவி தெரிவித்தார்.
gnanamuthu
