
சென்னை: சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் மைனாரிட்டி அரசு, மெஜாரிட்டி அரசு பற்றி காரசார விவாதம் நடைபெற்றது. மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ''மெஜாரிட்டி அரசில் மின்வெட்டு 16 மணி நேரமாக இருக்கிறது. வெட்கம் இல்லையா?" என்று கேட்டார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றபோது மின்வெட்டு பிரச்சனையும் பேசப்பட்டது. "அதிமுக ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் நிலவும் மின் பிரச்னை தீர்க்கப்படும்; தமிழகம் மின் மிகை மாநிலமாகும் என்றனர். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. எங்கே மின்சாரம்?" என்று தி.மு.க. உறுப்பினர் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார்.
இதற்கு, அ.தி.மு.க. உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. என்றாலும் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதில் சொல்ல எழுந்தார். "இதற்கு முன் நடந்த ‘மைனாரிட்டி' தி.மு.க. ஆட்சியில், மின்சாரத்துக்கு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை. குடும்ப பிரச்சனை உட்பட பல பிரச்சனைகள் இருந்ததால், அதை சரிசெய்யவே தி.மு.க.விற்கு காலம் போய்விட்டது. இதனால், மாநிலத்தின் மின் பிரச்சனையை தீர்க்க அவர்களால் முடியவில்லை" என்றார்.
இவரது இந்த பதிலுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கோபத்தோடு எழுந்து பேசினார். "மின்துறை அமைச்சர், கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், எதற்கோ பதில் சொல்கிறார். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘தேர்தல் முடிந்து, முதல் பட்ஜெட்டில், 2012 ஆகஸ்ட்டிற்குள் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறும்' என கூறப்பட்டுள்ளது. இப்போது, மின்வெட்டு பிரச்சனைக்கு, ‘மைனாரிட்டி' தி.மு.க. அரசு காரணம் என்கிறீர்கள்.
சரி. நாங்கள், ‘மைனாரிட்டி' என்பதை மறுக்கவில்லை. ஆனால், ‘மைனாரிட்டி'' அரசில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ‘மெஜாரிட்டி' அரசில், 16 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. வெட்கமா இல்லையா? என்றார் ஸ்டாலின்.