ஆந்திர மாநிலம் பழைய ஹைதராபாத் நகரில் உள்ளது மதண்ணாபேட் மற்றும் சயீதாபாத். நேற்று அந்த 2 பகுதிகளில் உள்ள இரு தரப்பினருக்கு இடையே திடீர் என்று மோதல் ஏற்பட்டது. மோதலுக்கான காரணம் உடனே தெரியவில்லை. ஆனால் நேற்று ஹைதராபாத் நகரில் குரமகுடாவில் உள்ள அனுமான் கோவிலில் பசு இறைச்சி துண்டுகள் கிடந்ததனால் தான் மோதல் ஏற்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த மோதல் வன்முறையாக மாறியது. இதையடுத்து அங்கிருந்த வாகனங்கள் மற்றும் 20 பேருந்துகளை வன்முறைக் கும்பல் அடித்து நொறுக்கியது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள தெருக்களில் தொடர்ந்து கல்வீச்சு நடந்ததில் 10 கடைகள் சேதமடைந்தன. இந்த வன்முறை அருகில் உள்ள சில இடங்களுக்கும் பரவியது.
மேலும் வன்முறை பரவாமல் தடுக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் வன்முறை கும்பலை கலைந்துபோகச் செய்தனர். இந்த வன்முறையில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலரை பேலீசார் கைது செய்தனர். இதையடுத்து மதண்ணாபேட், சயீதாபாத் ஆகிய 2 ஊர்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையில் உள்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. அதில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து உடனே அந்த 2 ஊர்களிலும் அமைதி திரும்ப வழிவகை செய்ய வேண்டும் என்று மாநில டிஜிபி தினேஷ் ரெட்டிக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
முதல்வரின் உதத்ரவையடுத்து பதற்றமான பகுதிகளில் துணை ராணுவம் குவிக்கப்பட்டது. தற்போது அப்பகுதிகளில் பதற்றம் நிலவினாலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.