முகத்தை திருப்பிகொண்ட அத்வானி அதிர்ச்சியில் எடியுரப்பா !


உடுப்பி: கர்நாடக மாநிலம் உடுப்பிக்கு வந்திருந்த பாஜக மூத்த தலைவர் அத்வானி, தன்னிடம் பேச வந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பாவுடன் பேச விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த எதியூரப்பா அங்கிருந்து கிளம்பிச் சென்றார். கடந்த ஆண்டில் கர்நாடகம் சந்தித்த பெரும் பிரளயங்களில் ஒன்று எதியூரப்பா விவகாரம். கடும் நெருக்கடிகள், அழுத்தங்கள், போராட்டங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் கட்சி மேலிடத்தின் கடும் உத்தரவை ஏற்று ஒரு வழியாக முதல்வர் பதவியிலிருந்து விலகினார் எதியூரப்பா. இதையடுத்து எதியூரப்பாவின் ஆதரவாளரான சதானந்த கெளடா முதல்வர் பதவியில் அமர்ந்தார்.

தென்னிந்தியாவின் முதல் பாஜக முதல்வர் என்ற பெருமையைப் பெற்ற எதியூரப்பா பதவியில் இருந்தவரை ஏற்றத்தில்தான் இருந்தார். ஆனால் இறங்கிய பின்னர் தற்போது அனைவராலும் உதாசீனப்படுத்தப்பட ஆரம்பித்துள்ளார். குறிப்பாக கட்சி மேலிடத்தால் உதாசீனப்படுத்தப்படுகிறார். இதை உடுப்பியில் நடந்த நிகழ்ச்சி நிரூபித்துள்ளது.

கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா சமீபத்தில் பெங்களூரில் நடந்த நிகழ்சசியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் தகனம் சொந்த ஊரான உடுப்பியில் நடைபெற்றது. இதில் அத்வானி, எதியூரப்பா, சதானந்த கெளடா, ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது அத்வானி, கெளடா மற்றும் ஆனந்தக்குமார் ஆகியோர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி எதியூரப்பா வந்தார். அத்வானியிடம் அவர் பேச முயன்றபோது அவர் டக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டாராம். இதனால் எதியூரப்பா அதிர்ச்சி அடைந்தார். சதானந்த கெளடாவும் கூட எதியூரப்பாவை கண்டுகொள்ளவில்லையாம். இது மேலும் அதிர்ச்சி தர விருட்டென அங்கிருந்து கிளம்பி விட்டார் எதியூரப்பா.

சமீபத்தில்தான் தனக்கு கட்சியில் உயர் பதவி தர வேண்டும் என்று கட்சிக்கு கெடு விதித்திருந்தார் எதியூரப்பா. ஆனால் அவரைச் சுற்றிலும் ஊழல் புகார்கள், வழக்குகள் குவிந்து கிடப்பதால் எதியூரப்பாவை கட்சி மேலிடம் கண்டு கொள்ளவே இல்லை. 

இந்த நிலையில் அத்வானி பேச மறுத்து முகத்தைத் திருப்பிக் கொண்டதால் கடும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளார் எதியூரப்பா என்று கூறப்படுகிறது. இதன் விளைவை எந்த ரூபத்தில் கர்நாடக பாஜக சந்திக்கப் போகிறதோ என்ற பரபரப்பு இப்போதே தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: