நகைக்கடை கொள்ளை சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட எஸ்பி வே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுயில், "நகைக்கடை கொள்ளையர்கள் விட்டுச்சென்ற கியாஸ் சிலிண்டர்கள், இரும்பு சாதனங்களை கைப்பற்றி விசாரித்ததில், திருப்பூரில் உள்ள ஒரு கடையில் கியாஸ் சிலிண்டரை வாங்கியது கண்டறியப்பட்டுள்ளது. அந்த கடைக்காரரை அழைத்து வந்து, கியாஸ் சிலிண்டர் வாங்க வந்த நபர் பற்றி அவர் சொன்ன அடையாளத்தை அடிப்படையாக வைத்து கம்ப்யூட்டரில் வரைபடம் வரையப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தில் 4 அல்லது 5 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த ஒரு வாரமாக தங்கி இருந்து நகைக்கடையை நோட்டமிட்டு உள்ளனர்.
கொள்ளையர்கள் இந்தி மற்றும் பெங்காலி மொழியில் பேசி இருப்பதால், அவர்கள் ஜார்க்கண்ட், மேற்குவங்காளம், ஒரிசா ஆகிய வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.
துப்புக்கொடுத்தால் பரிசு
கொள்ளையர்களின் மாதிரி புகைப்படத்தை கொண்டு, குழுவுக்கு 4 பேர் வீதம் 100 குழுக்கள் அமைத்து நேற்று நள்ளிரவு முழுவதும் 400 போலீசார் திருப்பூரில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
இதில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த வட மாநில வாலிபர்களை டவுன் ஹாலுக்கு அழைத்து வந்து, விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை 100-க்கும் மேற்பட்ட வடமாநில வாலிபர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இதில் பலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். இந்த சம்பவத்தில் முக்கிய தடயம் சிக்கி உள்ளது. விரைவில் கொள்ளையர் பிடிபடுவார்கள்," என்றார்.